4
.
நாம் ஒவ்வொருவரும் தனித்தனி மனிதர்கள்தாம். யார் ஒருவரைப் போலவும் இன்னொருவர் இல்லை; இருக்க வேண்டியதும் இல்லை. 'தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை' என்னும் பழமொழி கூட, ஒரு விதமான சாயலைத்தான் குறிக்கின்றதே அன்றி, ஒருவரைப் போல இன்னொருவர் 'அச்சு அசலாக' இருப்பார் என்று கூறவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குணம், நிறம், பழக்கவழக்கங்கள் இருந்தே தீரும். எனவே நாம் ஒவ்வொருவரும் தனித்தனி மனிதர்கள்தாம்.
.
ஆனாலும், நாம் மட்டும் இந்த உலகில் தனியாக வாழவில்லை. நம்மைப் போலவே இன்னும் பல கோடி மனிதர்கள், பல்வேறு விதமான விலங்குகள், மரம்-செடி-கொடிகள், பலவோடும் சேர்ந்தே வாழ்கிறோம். ஆக, நாம் ஒரு சமூகத்திற்குள் வாழ்கிறோம். அச்சமூகம் ஒரு நாட்டிற்குள்ளும், அந்நாடு இவ்வுலகத்திற்குள்ளும் அடங்கியிருக்கின்றன. ஆகையால், நாம் தனி மனிதர்கள் என்றாலும், சமூகம், நாடு, உலகம் ஆகிய அனைத்தும் நம்மைப் பாதிக்கின்றன; நாமும் அவற்றைப் பாதிக்கின்றோம்.
.
ஆதலால் தனிமனிதன் X சமூகம், தனிமனிதன் X நாடு, தனிமனிதன் X உலகம் ஆகிய உறவு அல்லது முரண், பல்வேறு மேன்மைகளுக்கும், பல்வேறு சிக்கல்களுக்கும் வழி வகுக்கின்றன. இந்த உறவு / முரண் பின்னல்களைப் புரிந்துகொண்டு, தம் தனி வாழ்க்கையை 'லாவகமாக' அமைத்துக்கொள்கின்றவர்கள். சமூகம், நாடு, உலகம், ஆகியனவற்றால் பயன் பெறுகின்றனர். அவற்றையும் பயன் அடையச் செய்கின்றனர். இயலாதவர்கள், அவற்றினால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அவற்றிற்கும் சிக்கல்களை உருவாக்குகின்றனர்.
.
எனவே, ஒவ்வொரு மனிதனுக்கும் சமூகப் பார்வை, தேசியப் பார்வை, உலகப் பார்வை என்பன கண்டிப்பான தேவைகளாக உள்ளன. உலகில் பலநூறு வகையான சமூகங்கள் உள்ளன. ஒவ்வொரு சமூகமும், 'ஒரு வகையான' மக்கள் கூட்டம், அந்த 'வகை' எப்படி உருவாகின்றது என்பதைப் பார்க்க வேண்டும். ஒரு பொதுவான மொழி. அம்மொழியின் விளை பொருள்களான கலை, இலக்கியம், அவற்றினால் வெளிப்படுத்தப்படும் பண்பாடு, அது உருவாக்கும் பொதுவான உளவியல் பாங்கு, அனைத்தையும் கற்றுத்தரும் கல்வி முதலான பல்வேறு கூறுகளால் ஒரு சமூகம், கால ஓட்டத்தில், கட்டமைக்கப்படுகின்றது. பிறகு ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு வரலாறு உருவாகின்றது.
.
வேறுபட்ட சமூகங்களுக்குள் உறவும், மோதலும் ஏற்படுகின்றன. உறவைப் பேணி வளர்க்கவும், மோதலில் வென்று அவர்களை அடிமை கொள்ளவுமாகச் சமூகத் தலைமைகள் பிறக்கின்றன. சமூகத் தலைமைகள், ஒரு கட்டத்தில் அரசுகளாக (State) நிலை பெறுகின்றன.
>
ஒரு சமூகம், ஒரு நாடு இரண்டிற்குமிடையில், அரசு வகிக்கும் பாத்திரம் குறிப்பிடத்தக்கது. ஓர் அரசின் இறையாண்மைக்கு (Soverignity) அதாவது அதிகார ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட சமூகம் அல்லது சமூகங்கள் ஒரு நாடு என்று பெயர் பெறுகின்றது. சமூகத்திற்கும் சட்ட திட்டங்கள் உண்டு. ஆனால் அவை திட்டவட்டமாக எழுதப்படாதவை. மரபு வழித் தொடர்ச்சியாக உணரப்படுபவை. அரசின் சட்டங்களோ கறாரானவை. ஆட்சி அதிகாரம் உடையவை.
.
ஒரு சமூகம், எப்போது ஒரு ஆட்சியின் கீழ் வருகின்றதோ, அப்போதுதான் அது ஒரு நாட்டின் பகுதியாகவோ அல்லது தனி நாடாகவோ ஆகின்றது. ஒரே ஒரு சமூகம், ஒரு தனி நாடாக ஆகும்போது அதனை ஒரு தேசிய அரசு (National State) என்றும், பல சமூகங்கள் இணைந்து ஒரு நாடு உருவாகும் வேளையில், அதனைப் பல்தேசிய (Multinational State) அரசு என்றும் அழைக்கின்றனர். ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் ஒரு தேசிய அரசுகளாக உள்ளன. பல்தேசிய அரசுக்கு இந்தியா ஏற்ற எடுத்துக்காட்டாக உள்ளது. சமூகம் என்பதே நாட்டினம் அல்லது தேசிய இனம் (Nationality) என்று அழைக்கப்படுகிறது. தேசிய இனம் நாடாக உருமாறும் பொழுது இன்னொரு விந்தையும் நடைபெறுகின்றது. ஒரே தேசிய இனம் இரண்டு, மூன்று நாடுகளாகவும் ஆகிவிடுகின்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேலும் சில நாடுகளில் ஆங்கில தேசிய இனமே உள்ளது. அவ்வாறே ஸ்பானிய தேசிய இனம், ஸ்பெயின், க்யூபா, அர்ஜென்டைனா முதலான பல நாடுகளில் பரவியுள்ளது.
.
ஆங்கிலேயர்களும், ஸ்பானியர்களும் மேற்காணும் நாடுகளில், ஆளும் தேசிய இனமாக உள்ளனர். ஆனால் இந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய இரு நாடுகளில் உள்ள தமிழ்ச் தேசிய இனமும், ஈரான், ஈராக், துருக்கி, சிரியா ஆகிய நான்கு நாடுகளில் வாழும் குர்து தேசிய இனமும், ஆளப்படும் தேசிய இனங்களாக உள்ளனர்.
.
மொத்தத்தில் உலகில் உள்ள நாடுகளைச் சமூக அடிப்படையில் நாம் மூன்று விதமாகப் புரிந்து கொள்ளலாம்.
1. ஒரே சமூகம் - ஒரு நாடு
2. பல்வேறு சமூகங்கள் - ஒரு நாடு
3. ஒரு சமூகம் - பல்வேறு நாடுகளில்.
.
சமூகம் என்று நான் குறிப்பிடுவதை, அரசியல் அறிவியல் (Political Science) துறையினர் தேசிய இனம் என்று கூறுவதாகச் சொல்லியுள்ளேன். ஏன் இந்த வேறுபாடு எனில், சமூகம் என்ற சொல், இன்று வழக்கில் பல்வேறு பொருள்களில் கையாளப்படுகிறது. முதலியார் சமூகம், வன்னியர் சமூகம் என்று சாதி அடிப்படையிலும், இந்து சமூகம், இஸ்லாமிய சமூகம் என்று மத அடிப்படையிலும், ஆசிரியர் சமூகம், எழுத்தர் சமூகம் என்று தொழில் அடிப்படையிலும், இன்னும் பல அடிப்படைகளிலும் அச்சொல் ஆளப்படுகிறது. அதனால் அது பொதுமைப்பட்டுத் தனக்குரிய தெளிவை இழந்துள்ளது. எனவேதான், தேசிய இனம் என்று அவர்கள் குறிக்கின்றனர். எனினும் எளிமை கருதி, சமூகம் என்ற சொல்லையே இத்தொடரில் நான் பயன்படுத்துகின்றேன்.
சமூகம் பற்றி-அதாவது நாம் தமிழ்ச் சமூகம் பற்றி முதலில் நாம் தெளிவாக அறிந்துகொண்டு, அதன்பின் நாடு, உலகம் நோக்கிச் செல்லுதல் பொருத்தமாக இருக்கும்.
.
உலகில் உள்ள மிகத் தொன்மையான (பழமையான) சமூகங்களில், நம் தமிழ்ச் சமூகமும் ஒன்று. இக்கூற்று, பெருமை நோக்கிச் சொல்லப்படவில்லை. வரலாற்று உண்மை என்னும் அடிப்படையிலேயே குறிப்பிடப்படுகின்றது.
-
தொன்மையான சமூகங்கள் எல்லாவற்றிற்கும், மரவு ரீதியான பல பெருமைகளும், நவீன உலகிற்கு வர முடியாத சில சிக்கல்களும் இருக்கும். பழமையின் பெருமை பேசிப் பேசித் தங்களைப் புனிதமானவர்களாகக் கருதி, அடுத்த கட்டத்திற்கு வர முடியாமல், சின்னச் சின்னத் திட்டுகளாகத் தேங்கிப்போகும் பழங்குடிகள் பல உலகில் இருக்கவே செய்கின்றன. ஆனால் தமிழ்ச் சமூகம் அந்த விபத்திலிருந்து தப்பி வெளிவந்துவிட்டதனால், 'முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்' இயங்கிக் கொண்டுள்ளது.
.
நம் சமூகத்தின் தொன்மைக் கூறுகளில் முதன்மையானது நம் தமிழ் மொழி. உலகிலேயே மிகப் பழமையான மொழிகள் என்று ஆறு மொழிகளை மொழியியல் அறிஞர்கள் குறிக்கின்றனர். கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, தமிழ், சமஸ்கிருதம், சீனம் ஆகியவையே அவை. தற்செயலாக அவற்றுள் மூன்று மேலை நாடுகளின் மொழிகளாகவும், மூன்று கீழை நாடுகளின் மொழிகளாகவும் அமைந்துள்ளதைக் காண முடிகின்றது.
-
ஆறு மொழிகளும் இன்று உயிருடன், மக்கள் மொழிகளாக இருக்கின்றனவா என்றால், இல்லை.
-
நெடுநாள்களுக்கு முன்பே கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு ஆகியவை வழக்கிழந்து விட்டன. ஆங்கிலோ-சாக்ஸன் மொழிக் குடும்பத்தில் மூத்த மொழிகளான கிரேக்கமும், லத்தீனும் 14ஆம் நூற்றாண்டு வரை மேற்கு உலகை ஆளும் மொழிகளாக இருந்தன. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மக்கள் கூட, தங்கள் தாய் மொழியான ஆங்கிலத்தைத் தாழ்வாகக் கருதினர். 'லத்தீன் பட்டுத் துணி போன்றது, ஆங்கிலம் கந்தைத் துணி போன்றது' என்று ஆங்கிலேயர்களே கருதிய காலம் அது. ஆனால் காலப்போக்கில், ஆங்கிலம் உலகமொழி என்னும் இடத்தையே பிடித்துவிட்டது. கிரேக்கமும், லத்தீனும் காணாமல் போய்விட்டன.
-
ஹீப்ரு மொழி வழக்கிழந்து போனாலும், அதனைத் தாய்மொழியாகக் கொண்ட யூதர்கள் மீண்டும் அதனைப் புதுப்பிப்பதில் விடா முயற்சியுடன் உள்ளனர். 'இட்டீஷ்' (Iddish) என்னும் பெயரில், அது இன்று உயிர்பெற்றுள்ளது. இஸ்ரேல் நாடும் அந்தச் சமூகத்தினரும் அதற்காக அரும்பாடு பட்டுக்கொண்டுள்ளனர்.
கீழை மொழிகளைப் பொறுத்தவரையில், சமஸ்கிருதம் என்பது மந்திரங்களைக் கொண்ட, சடங்குகளுக்கு மட்டும் பயன்படுகின்ற புரோகித மொழி (Prohit Language) யாகவே என்றும் இருந்துள்ளது. அது வெகு மக்களின் வழக்கு மொழியாக என்றும் இருந்ததில்லை.
-
இறுதியாக, தமிழ், சீனம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே இன்றும் நிலைத்து நிற்கும் தொன்மை மொழிகளாக உள்ளன. இவற்றுள்ளும், கணிப்பொறித்துறை முதலிய இன்றைய அறிவியல் துறைகளில், தமிழ் வெகு விரைவாக முன்னேறி வருவதை நாம் அறிவோம்.
-
இச்செய்திகளில் எவையும், தற்பெருமைக்காகவோ, புனைந்துரையாகவோ எழுதப்படவில்லை. உண்மைகள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன. எனினும், இத்தகைய சிறப்பைப் பெற்றுள்ள நம் சமூகம் எப்படி, எப்போது பின்னடைந்தது என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா?
4 comments:
Arpudam..
Arpudam..
Neengal oru arivu pokkisam.
Vijayarangan.
Coimbatore.
தமிழ் மொழியின் சிறப்பினை எளிமையாக விளக்கியமைக்கு நன்றி .
கிரேக்கம் இன்றும் Greece மற்றும் Cyprus நாடுகளில் பரவலாக தானே வழக்கில் உள்ளது?
Post a Comment