5
இரண்டு சமூகங்களுக்குள் மோதல்கள் வருவது இயல்புதான் என்பதை நாம் அறிவோம். அம்மோதல்கள் சில நேரங்களில் இராணுவப் படையெடுப்பாகவும், சில வேளைகளில் பண்பாட்டுப் படையெடுப்பாகவும் அமையும்.
-
தமிழ்ச் சமூகம், ஏடறிந்த காலம் தொட்டு, இரண்டு விதமான படையெடுப்புகளுக்கும் உள்ளாகியிருக்கிறது.
-
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழ் அரசர்களே, ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டிருந்தனர். சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் மோதல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் மூன்று மன்னர்களின் ஆட்சிகளின் கீழ் இருந்த அனைவரும் தமிழர்களே!
-
அன்றைய தமிழ்நாட்டின் நிலை, சமூக ஒருமையும், அரசுப் பன்மையும் கொண்டதாக இருந்தது. எனவே, அரசுகளுக்கு இடையிலான மோதல், பண்பாட்டுத் தளத்தின் மாற்றம் எதனையும் ஏற்படுத்திவிடவில்லை.
-
கி.பி. 2ஆம் நூற்றாண்டு அளவில், களப்பிரர் கி.பி. 5இல் பல்லவர் ஆகிய மன்னர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து ஆட்சியைக் கைப்பறினர். அப்போது பண்பாட்டுக் கலப்பும், பண்பாட்டு ஆதிக்கமும் தொடங்கின.
-
பண்பாட்டு ஆதிக்கம் முதலில் மொழி மீதுதான் செலுத்தப்படும் என்பது வரலாறு. இங்கும் அப்படித்தான் நடைபெற்றது. தமிழைப் புறந்தள்ளிவிட்டு, சமஸ்கிருதம் ஆட்சிக் கட்டிலுக்கு அருகில் அமரத் தொடங்கியது. ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்ற காரணத்தால், பொதுமக்களிடமும் அம்மொழி செல்வாக்குப் பெற்றது.
-
கி.பி. 470ஆம் ஆண்டு, தமிழகம் வந்த சீனப் பயணியான யுவான் சுவாங், தன் பயணக் குறிப்பில், ''சென்னையில் உள்ள திருவொற்றியூர், காஞ்சிபுரம், புதுவைக்கு அருகில் உள்ள பாகூர் ஆகிய மூன்று ஊர்களில் மட்டுமே ஏறத்தாழ 5000 மாணவர்கள், சமஸ்கிருதம் படித்துக் கொண்டிருந்த செய்தியை விளக்குகின்றார்.
-
பிற்காலப் பாண்டியர் சோழர் ஆட்சியிலும் அந்நிலை தொடர்ந்தது. குறிப்பாக, இராஜராஜசோழன் காலத்தில், சமஸ்கிருதம் அறிந்தவர்கள் மட்டுமே அரசனின் மதிப்பைப் பெற்றனர். கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே உரிய உரிமையாக ஆக்கப்பட்டது.
-
நாயக்கர் ஆட்சிக் காலம், பண்பாட்டுத் தளத்தைப் பொறுத்தப்பட்டில், சோழர் ஆட்சியின் தொடர்ச்சியாகவே இருந்தது.
-
சங்க இலக்கியங்கள், திருக்குறள் ஆகியனவற்றில் உள்ள தமிழ்மொழி, மக்களுக்கு அந்நியமாகிப்போனது. எனவே அவ்விலங்கியங்களுக்குப் பொழிப்புரை, கருத்துரை எழுத வேண்டியதாயிற்று. அவ்வாறு எழுதிய உரையாசிரியர்கள் பலர், தமிழும், சமஸ்கிருதமும் கலந்த நடையையே பின்பற்றினர். மணியும், பவளமும் கலந்து கோத்த மாலை போல, தமிழும், சமஸ்கிருதமும் கலந்து கிடக்க வேண்டும் என்று விரும்பினர். அதுபோன்ற தமிழ் உரைநடைக்கு 'மணிப்ரவாள நடை' என்று பெயரிட்டுப் பெருமைப் படுத்தினர்.
-
எவ்வளவு புலமை வாய்ந்த தமிழ்ப் புலவர் என்றாலும், அவருக்கு சமஸ்கிருதப் புலமையும் இருந்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக ஆனது. அழகிய தமிழ்ச்சொற்களால் ஆக்கப்பட்ட ஆழ்வார்ப் பாசுரங்களுக்கு 'ஈட்டு உரை' எழுதிய பெரிய வாய்ச்சான் பிள்ளையின் மணிப்ரவாள நடையே போற்றிப் பாராட்டப்பெற்றது.
-
தமிழில் இலக்கியம் படைப்போரின் எண்ணிக்கை குறைந்து போனது. மிகச் சிலவாக வெளிவந்த இலக்கியங்களும் கூடச் 'சிற்றிலக்கியங்கள்' என்றே பெயர் பெற்றன.
-
இப்படியாகத் தமிழன் தன் பழம்பெரும் மொழியின் சிறப்பை இழந்தான்.
-
பழக்கவழக்கங்களிலும் பல அந்நியப் பண்பாடுகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கின.
-
பழந்தமிழரின் திருமண முறைகள் மாறத் தொடங்கின. அகநானூறு காட்டும் திருமண முறைகள் வேறாகவும், சிலப்பதிகாரம் காட்டும் திருமண முறைகள் வேறாகவும் உள்ளன.
-
தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே, கோவலன்-கண்ணகி திருமணம்தான், முதன் முதலாகத் தீவலம் வந்து, புரோகிதர்கள் மந்திரம் சொல்லி நடத்தி வைத்த திருமணமாகப் பதிவாகியுள்ளது.
-
சிந்து சமவெளி நாகரிகம், ஆதிச்சநல்லூர்ப் புதைகுழி ஆய்வுகளைக் கொண்டு பார்க்கும்போது, மண்ணையும், பெண்ணையும் போரில் மாண்ட மாவீரர்களையும் மட்டுமே தமிழர்கள் வணங்கி வந்துள்ளனர். நெருப்பை வணங்கும் வழக்கம் இடையில் வந்துள்ளது. அப்பழக்கம் ஏற்பட்ட பின்னரே, யாகங்கள் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். சங்க காலத்திலேயே இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, முதுகுடுமிப் பல்யாகசாலைப் பெருவழுதி ஆகிய மன்னர்களின் அடைமொழிப் பெயர்கள், வேள்விகள் நடைமுறைக்கு வந்து விட்டதைக் காட்டுகின்றன.
-
அதன் தொடர்ச்சியாகவே, கோவலன்லிகண்ணகி திருமணத்தில் அவர்கள் நெருப்பை வலம் வந்து 'அக்கினி சாட்சியாக' மணமுடித்துக் கொண்டுள்ளனர்.
-
பழந்தமிழகத்தில், பெரிய பெரிய தாழிகளில் (பானைகள்) வைத்தும், பிறகு நேரடியாகவும், இறந்து போனவர்களை மண்ணில் புதைக்கும் பழக்கம் இருந்தது. பிற்காலத்தில், நெருப்பை வழிபடும் அந்நியப் பண்பாட்டை ஏற்றுக்கொண்ட தமிழன், இறந்தவர்களின் உடலுக்கு நெருப்பு வைக்கத் தொடங்கினான். கி.பி. 958ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றுதான், முதன்முதலில், பிணங்கள் எரியூட்டப்பட்ட செய்தியை நமக்குக் கூறுகின்றது.
-
பழந்தமிழகத்தில், காதலும், காதலர்களின் உடன்போக்கும் இயல்பான சமூகப் போக்காக இருந்தது. பிறகுதான், பெற்றோர், உறவினர் ஒப்புதலை நோக்கிக் காதலர்கள் காத்திருக்கும் நிலை உருவாயிற்று.
-
சங்க காலத்தில் கல்வி எல்லோருக்கும் பொதுவாக இருந்தது. பெண்களிலும் பலர் சங்கப் புலவர்களாய் இருந்ததைக் காண முடிகிறது. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாய் அந்த உரிமை பறிபோயிற்று.
-
தமிழர்களின் வழிபாட்டு முறைகளிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டது. போரில் இறந்தவர்கள், இறந்த சான்றோர்கள் ஆகியோரின் நினைவாய் நடப்படும் நடுகற்களையே அன்று வணங்கினர். நடுகல் வழிபாடு மெல்ல மெல்ல அகன்று, கற்பனைக்கு எட்டாத, ஆறு தலைகள், 12 கைகள் கொண்ட, பல்வேறு அவதாரங்கள் எடுக்கக் கூடிய பெருந்தெய்வங்களைத் தமிழர்கள் வணங்கத் தொடங்கினர்.
-
இவ்வாறாகத் தமிழன் தன் பண்பாட்டுக் கூறுகளையும் இழந்தான்.
-
தமிழ்மண் அறியாத, புதிய பண்பாடாக, 'சாதியப் பண்பாடு' உள் நுழைந்தது.
-
சாதிகள், தமிழர் ஒற்றுமையைக் குலைத்தன. சமத்துவத்தைக் குலைத்தன. மூடநம்பிக்கைகளை வளர்த்தன. நச்சுச் செடியாய், மரமாய் நாடெங்கும் சாதி வளர்ந்தது.
-
அந்தச் சாதியின் தோற்றம், வளர்ச்சி, அதனால் ஏற்பட்ட மாபெரும் கேடுகள் ஆகியன குறித்து அறியாமல், தமிழ்ச் சமூகம் பற்றி நாம் அறிந்து கொள்ளவே முடியாது.
No comments:
Post a Comment