
![]() | Hello world! 29 Comments - 16 Aug 2009 |
![]() | An image in a post 6 Comments - 16 Jul 2009 Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Quisque sed felis. Aliquam sit amet felis. Mauris semper, velit semper laoreet dictum, quam diam dictum urna, nec placerat elit nisl in quam. Etiam augue pede, molestie eget, rhoncus at, convallis ut, eros. Aliquam pharetra. Nulla in tellus eget odio sagittis blandit. Maecenas at nisl. Null... More Link |
Sunday, December 28, 2008
Saturday, October 18, 2008
Saturday, April 26, 2008
கனவு....காதல்....கொஞ்சம் கடமை - 10
10
வி.பி.சிங். கொடுத்த விலை!
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், தமிழ்நாட்டில்தான் முதல் முதலாக 8.33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பிறகுதான் இந்திய அளவில் அது நடைமுறைக்கு வந்தது.
வெள்ளையர்கள் ஆண்ட காலத்திலேயே தொழிலாளர் அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்கர், 1942ஆம் ஆண்டில், இந்தியாவெங்கும் உள்ள பட்டியல் சாதியினருக்கு 12.5 சதவிகித இடஒதுக்கீடு, அரசுப் பணிகளில் அளிக்கப்பட வேண்டும் என்று கோரினார். ஏறத்தாழ ஓர் ஆண்டுக்குப் பிறகு, 11.08.43 அன்று, 8.33 சதவிகித இடஒதுக்கீடு குறித்த ஆணை வெளியாகியது. ஆதலால், பட்டியல் சாதியினர் இடஒதுக்கீடு பெற்றுத் தந்த பெருமை அம்பேத்கரையே சேரும்.
இதற்கிடையே, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை சீக்கியர்கள், பார்சிக்கள், ஆங்கிலோ இந்தியர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர் முன் வைத்தனர். 1931ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி, 32 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகையில் 8 கோடிப் பேர் இஸ்லாமியராக இருந்தனர். (அது பாகிஸ்தானையும் உள்ளடக்கிய இந்தியா என்பதை நினைவில் கொள்ள வேண்டும்). எனவே, மத்திய அரசின் எல்லா வேலைகளிலும், இஸ்லாமியர்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடும், சீக்கியர், பார்சி, கிறித்துவர், ஆங்கிலோ இந்தியர் ஆகிய நால்வருக்குமாகச் சேர்த்து 8.33 சதவிகித இடஒதுக்கீடும் வழங்கும் ஆணை 1933 இறுதியில் வெளியிடப்பட்டது.
அப்போது பொப்பிலி அரசர், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். அவருடைய ஆதரவோடு, 'சென்னைத் தலைமாகாணப் பார்ப்பனர் அல்லாதோருக்குச் சிறப்பு இடஒதுக்கீடு' (நல்ங்ஸ்ரீண்ஹப் தங்ள்ங்ழ்ஸ்ஹற்ண்ர்ய் ச்ர்ழ் ஙஹக்ழ்ஹள் டழ்ங்ள்ண்க்ங்ய்ஸ்ரீஹ் சர்ய் இழ்ஹட்ம்ண்ய்ள்) என்னும் கோரிக்கையை எடுத்துக்கொண்டு, சர்.ஏ.இராமசாமி முதலியார் டெல்லி சென்றார். அங்குள்ள அமைச்சர்கள் அனைவரையும் சந்தித்து, தன் கோரிக்கைக்கு ஆதரவு திரட்டினார். அவர் வாதத்தில் உள்ள நியாயத்தை அவர்களும் ஏற்றனர்.
ஆனால், டெல்லியிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், அதுபோன்ற ஒதுக்கீடு, ஆதி திராவிட மக்களின் நலனைப் பாதிக்கும் என்று மறுத்துக் குறிப்பு எழுதினர். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழும் கதையை இராமசாமி முதலியார் மீண்டும் அனைவருக்கம் விளக்கினார். அதன் பயனாக, 1935 ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி, அது நடைமுறைக்கு வந்தது. நீதிக்கட்யினரின் முயற்சி இல்லையெனில், அன்றைக்கு அது நடந்திருக்காது.
ஆனால் அனைத்து இடஒதுக்கீடுகளும், இந்தியா விடுதலை பெற்ற பிறகு மறுக்கப்பட்டுவிட்டன. 1947 செப்டம்பர் மாதம் 'இடஒதுக்கீட்டு ரத்து ஆணை' வெளியானது. அதன்பின் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, பட்டியல் சாதியினருக்கு மட்டும் மத்திய அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கு எவ்வித இடஒதுக்கீடும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது.
பட்டியலின மக்களுக்கு, நாடாளுமன்றத்தில், ஆறில் ஒரு பங்கு இடத்தை ஒதுக்க, சட்ட விதி 330 வகை செய்துள்ளது. ஆனால் விதி 332இன் படி, பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே இத்தகைய ஒதுக்கீடு செல்லும் என்ற நிலை உள்ளது. எனவே, பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இச்சட்ட விதி புதுப்பிக்கப்படுகின்றது.
1950ஆம் ஆண்டு, கல்வித்துறையில், பிற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து ஒரு பார்ப்பனர் வழக்குத் தொடர்ந்தார். அதே ஆண்டு ஜுன் மாதத்தில், அவ்வழக்கில். விதி 15(1) இன் படி இடஒதுக்கீடு செல்லாது என்று, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அடுத்த மாதமே (1950 ஜுலை), தில்லி உச்சநீதிமன்றம் அத்தீர்ப்பை உறுதி செய்தது.
அதன் எதிர்வினையாகத் தமிழகமெங்கும் எதிர்ப்புக் கிளம்பியது. 03.12.1950 அன்று, திருச்சியில் நடைபெற்ற பெரிய மாநாடு ஒன்றில், தில்லி அமைச்சர்களுக்குக் கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தைப் பெரியார் அறிவித்தார்.
தமிழகத்தின் கொந்தளிப்பு, தில்லியில் எதிரொலித்தது. அதன் விளைவாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் 1951 மே மாதம் இந்திய நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டது. 15(4), 16(4) என்னும் இரு புதிய சட்டப் பிரிவுகள் புதிதாய்ச் சேர்க்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்பு ஆகினவற்றில் இடஒதுக்கீட்டிற்கு வழிவகுக்கப்பட்டது.
எனினும், 1978 ஆம் ஆண்டு வரை, இந்தியாவின் வட மாநிலங்களில், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒரு விழுக்காடு இடம்கூட ஒதுக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். பீகார் மாநில முதல்வராகக் கர்ப்பூரி தாகூர் வந்த பிறகே, இடஒதுக்கீடு பற்றி அம்மக்கள் அறியத் தொடங்கினர். 1978 நவம்பர் முதல், வட மாநிலங்களிலும் மெல்ல மெல்ல இடஒதுக்கீடு நடைமுறை பரவத் தொடங்கியது.
எனினும், மத்திய அரசுப் பணிகளில், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பது இல்லவே இல்லை என்னும் நிலைதான் நீடித்தது. அதனால், மத்திய அரசின் கீழ் இருந்த அஞ்சலகத்துறை, தொடர்வண்டித் துறை, தொலைத் தொடர்புத் துறை, ஊடகவியல்துறை, உயிர்காப்பீட்டுத் துறை எனப் பல வலிமை வாய்ந்த துறைகளில் பிற்படுத்தப்பட்டவர்கள் மிக மிக குருகியே காணப்பட்டனர். இந்திய ஆட்சிப் பணியில் மட்டுமன்றி, மேற்கூறப்பெற்றுள்ள அனைத்துப் பணிகளிலும் ஒரு குறிப்பிட்ட சாதியினரே ஆதிக்கம் செலுத்தினர். ஆட்சி அவர்கள் கையில் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. ஆளும் கட்சியாக எந்தக் கட்சி வந்தபோதும், அதிகார வர்க்கம் மாறுவதில்லை என்பதால், அறிவிக்கப்படாத வருணாசிரம ஆட்சியே இன்று வரை நடைபெறுகிறது என்பது மிகையான கூற்றில்லை.
1953ஆம் ஆண்டு, மத்திய அரசுப் பணிகளில், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கலாமா என்பதைக் கண்டறிய நீதிபதி கலேல்கர் தலைமையில் ஒரு குழுவை, நேரு அரசாங்கம் அமைத்தது. காகா கலேல்கர் குழு என அறியப்படும் அக்குழு, 1955இல் தன் அறிக்கையைத் தலைமை அமைச்சர் நேருவிடம் ஒப்படைத்தது. ஆனால், அவ்வறிக்கையின் பரிந்துரை மீது எந்தவொரு நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கப்படவில்லை.
எனவே, ஒரு குறிப்பிட்ட சாதியினரின் ஆதிக்கம் 'சுதந்திர இந்தியாவில்' சுதந்திரமாகத் தொடர்ந்தது. 1951ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 3.5 சதவீதமாக மட்டுமே இருந்த பார்ப்பனர்கள், நிதி, நீதி, நிர்வாகத் துறைகளில் 50 சதவீதத்திற்கும் மேலாக இருந்தனர். அக்கால கட்டத்தின் ஒரு சிறிய புள்ளி விவரத்தைப் பாருங்கள்.
இந்தியா முழுவதும் இருந்த அரசுச் செயலர், துணைச் செயலர் பதவிகள் 506. அவற்றுள் 351 பேர் பார்ப்பனர்கள். உச்ச நீதி மன்றத்தில், 16 நீதிபதிகளில் ஒன்பது பேர் பார்ப்பனர். 140 வெளிநாட்டுத் தூதுவர்களில் 68 பேர் பார்ப்பனர். இந்தியாவின் மொத்தம் 3500 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 2376 பேர் பார்ப்பனர். ஆளுநர்களாக இருந்த 27 பேரில் 13 பேர் பார்ப்பனர்.
இந்நிலைமை ஒரு நாட்டை எங்கு கொண்டு போய்ச் சேர்க்கும்? இது எவ்வளவு பெரிய சமூக அநீதி?
இந்தியாவெங்கும் இந்த முனுமுணுப்புகள் கேட்கத் தொடங்கின. பிறகு அவை முழுக்கங்களாக மாறத் தொடங்கின.
மக்கள் எழுச்சியின் காரணமாக, மொரார்ஜி தேசாய், தலைமை அமைச்சராக இருந்த போது, காகா கலேல்கர் குழுவைப் போல இன்னொரு குழு, அதே நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது. அதுவே, 'மண்டல்குழு' என அறியப்படுகின்றது.
பீகாரைச் சேர்ந்த நீதிபதி பி.பி.மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட அந்தக் குழு, தன் பரிந்துரைகளை இந்திரா காந்தி தலைமை அமைச்சராக இருந்தபோது ஒப்படைத்தது.
இந்திரா காந்தியோ அவரைத் தொடர்ந்து வந்த ராஜீவ் காந்தியோ அந்தப் பரிந்துரைகளை நாடாளுமன்றத்ல் முன் வைக்கவில்லை. வி.பி.சிங். இந்தியாவில் தலைமை அமைச்சர் ஆன பிறகுதான் அதற்கு உயிர் வந்தது. மண்டல் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசுப் பணிகளில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பை, 07.08.1990 அன்று, வி.பி.சிங் அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தது.
அன்று இரவே, புதுதில்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில், அன்றைய பா.ஜ.க. பொதுச்செயலாளர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 'ரத யாத்திரை'த் திட்டம் வகுக்கப்பட்டது. சரியாக, மூன்றே மாதங்களில், பா.ஜ.க. தன் ஆதரவை விலக்கிக் கொள்ள நவம்பர் 7ஆம் தேதி, வி.பி.சிங் அரசு கவிழ்ந்தது.
''மண்டல குழு அறிக்கையின் ஒரு பகுதியை நடைமுறைப்படுத்த முயன்றமைக்கு நான் கொடுக்க நேர்ந்த விலைதான் இந்த ஆட்சி இழப்பு'' என்றார் வி.பி.சிங்.
Friday, March 7, 2008
கனவு....காதல்....கொஞ்சம் கடமை! - 9
இடஒதுக்கீடு! - சமூக நீதிப் போராட்டத்தின் தொடக்கம்
'ஏன் இந்நிலை?' என்னும் சிந்தனை கூட எழவில்லை. 'வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவதே' வாழ்க்கைத் தத்துவம் என்று கருதிய மக்களே இங்கு பெரும்பான்மையினராக இருந்தனர்.
1892ஆம் ஆண்டு, அனைவருக்கும் வேலைப் பகிர்வு வேண்டும் என்று கூறி, பார்ப்பனரல்லாத பலர் கையொப்பமிட்டு, அன்றைய சென்னைத் தலைமாகாண (Madras Presidency) ஆளுநராக இருந்த வென்லெக்கிடம் மனுக் கொடுத்தனர். அதற்கும் எவ்விதப் பயனும் ஏற்படவில்லை.
அவ்வமைப்பின் தொடர்ச்சியாகவும், வளர்ச்சியாகவும் 1916ஆம் ஆண்டின் இறுதியில் 'தென் இந்திய நல உரிமைச் சங்கம்' என்னும் அமைப்பு உருவானது. சி.நடேசனார், சர்.பிட்டி.தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர் அதனை உருவாக்கிய சிற்பிகள் ஆவர். அமைப்பின் சார்பில் 'நீதி' (Justice)என்னும் பத்திரிகை வெளியிடப்பட்டது. அதனைக்கொண்டு, அவ்வமைப்பு சுருக்கமாக 'நீதிக்கட்சி' (Justice party) என்று அனைவராலும் அறியப்பட்டது.
இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை, நீதிக்கட்சி மிக வலிமையாக உயர்த்திப் பிடித்தது. அதனால் அக்கட்சியின் செல்வாக்கு, தமிழ்நாட்டிலும், அன்று சென்னைத் தலைமாகாணத்தில் இணைந்திருந்த தென்னிந்தியப் பகுதிகளிலும் மிக விரைந்து பரவியது.
அதனைக் கண்ட காங்கிரஸ் கட்சிக்குள்ளும் விவாதம் பரவியது. காங்கிரசில் இருந்த பார்ப்பனர் அல்லாதோர் ஒருங்கிணைந்து 'சென்னைத் தலைமாகாண சங்கம்' (Madras presidency Association) என ஒன்றை உருவாக்கினர். பெரியார், திரு.வி.க. போன்றோர் அச்சங்கத்தில் பொறுப்பாளர்களாக இருந்தனர். அச்சங்கமும் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை முன்வைத்தது.
இடஒதுக்கீடு என்பது, வேலை வாய்ப்புகளில் மட்டும் இடம் கோருகின்ற கோரிக்கை அன்று. கல்வி, வேலை, அரசியல் என மூன்று தளங்களிலும், அனைத்துச் சாதியினருக்கும் சம உரிமை கோருகின்ற சமூக நீதிப் போராட்டத்தின் தொடக்கமே அது என்பதைத் தமிழ்ச் சமூகம் மெல்ல மெல்ல உணர்ந்தது.
இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் வி.பி.சிங் கூறியதைப்போல, ''இட ஒதுக்கீடு என்பது, அதிகாரக் கட்டமைப்பில், சமூகத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட அனைத்துச் சாதியினருக்கும் பங்கு அளிப்பதுதான்.'' (It is a question of power sharing and not jobs alone)
எப்போதும், எந்தச் சமூகத்திலும், சமூக மாற்றத்திற்கு முன்னோடியாக அமைவது, அதிகாரக் கட்டமைப்பின் மாற்றமே ஆகும். 'உயர் சாதியினர்' எனப்படுவோரிடம் மட்டுமே தேங்கிக் கிடக்கும் அதிகாரங்களை, அனைத்துச் சாதியினருக்கும் பகிர்ந்தளிக்கும் ஜனநாயகப் பாத்திரத்தைத்தான் இடஒதுக்கீடு செய்கிறது.
இதனைத் தெளிவாக உணர்ந்த இஸ்லாமியர்கள், 'முஸ்லீம் லீக்' கட்சி தொடங்கப்பட்ட உடனேயே இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையையே முதலில் முன்னிறுத்தினர். 1906 அக்டோபர் 1ஆம் நாள், ஆகாகான் தலைமையில், அன்றைய தலைமை ஆளுநர் மிண்டோவைச் சந்தித்து, இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு கோரினர்.
அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, 1909ஆம் ஆண்டு, மின்மோலிமார்லி சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்லாமியர்களுக்குத் தேர்தல்களில் தனித்தொகுதிகள் வழங்கப்பட்டன. அரசியல் தளத்தில் மட்டுமே அந்த இடஒதுக்கீடு அமைந்தது என்னும், இந்திய வரலாற்றில் அரசு வழங்கிய முதல் இடஒதுக்கீடு இதுவேயாகும்.
அவ்வொதுக்கீடு, நீதிக்கட்சிக்கும், சென்னைத் தலைமாகாணச் சங்கத்திற்கம் பெரிய உந்து சக்தியாக இருந்தது. 1917லி20ஆம் ஆண்டிகள் முழுவதும், தமிழகத்தின் அரசியல் கோரிக்கையாக அதுவே ஒலித்தது. அந்நிலை 1920ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நீதிக்கட்சிக்குப் பேருதவி செய்தது.
அவ்வாண்டின் இறுதியில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்ற நீதிக்கட்சி, 17.12.1920இல், சென்னை மாகாண அமைச்சரவையை அமைத்தது. பதவியேற்றவுடனேயே, அரசு வேலை வாய்ப்புகளில் அனைத்து மதத்தினர், சாதியினருக்கம் இடஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.
1921ஆம் ஆண்டு வெளியான அந்த ஆணைப்படி, பின்வருமாறு அரசு வேலைகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டன.
1. பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் | 44% |
2. பார்ப்பனர்கள் | 16% |
3. முசுலீம்கள் | 16% |
4. ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறித்துவர்கள் | 16% |
5. தாழ்த்தப்பட்டோர் | 8% |
____ 100 ____ |
இவ்வாணைக்கு 'உயர் சாதியினரிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தாலும், அதிகாரிகள் அனைவரும் அவர்களாகவே இருந்தமையாலும், அவர்களின் கைகளிலேயே அனைத்துப் பத்திரிகைகளும் இருந்தமையாலும், இடஒதுக்கீட்டு ஆணைக்கு எதிராகக் கிளம்பிய ஆரவாரத்தை ஆளும் கட்சியால் சமாளிக்க முடியவில்லை. அதனால், ஆட்சிக்காலம் முடிந்த 1916ஆம் ஆண்டு வரையில், ஆணையை அவர்களால் நடைமுறைப்படுத்த இயலவில்லை.
எனினும் அந்தக் காலகட்டத்தில்தான், தேவதாசி ஒழிப்புச் சட்டம், இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் முதலானவை உருவாக்கப்பட்டன.
1916ஆம் ஆண்டு தேர்தலில், காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தனர். (அப்போதே தேர்தல் கூட்டணி ஏற்பட்டுவிட்டது)
அந்த ஆட்சியில், பத்திரப் பதிவுத்துறை அமைச்சராக இருந்த எஸ்.முத்தையா முதலியார்தான் 1927இல், வகுப்புவாரி ஆணையை முதன் முதலாக நடைமுறைப்படுத்தினார்.
'கம்யூனல் ஜி.ஓ' (Communal G.O) என்று அறியப்பட்டு, புகழ்பெற்ற ஆணையாக அது இன்றும் விளங்குகின்றது. தமிழக வரலாற்றில் மிகப்பெரும் மாற்றத்தையும், புரட்சியையும் ஏற்படுத்திய ஆணையாக (G.O.M.S.No. 1071 - 04.11.27) அது அமைந்தது. அவ்வாணை தொடங்கியே, ஆயிரம் ஆண்டுகளாகக் கல்வி, வேலை உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகம், முன்னேற்றப் பாதையில் முதல் அடி எடுத்து வைத்தது.
ஆணையை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், துறை வாரியாகப் பல்வேறு தொடர் ஆணைகளை வெளியிட்டு, 1929ஆம் ஆண்டிற்குள், அதன் பயன்களையும் காணச் செய்த பெருமை முத்தையா முதலியாருக்கே உண்டு. அதனால்தான் தந்தை பெரியார் 'முத்தையா முதலியார் வாழ்க' என்று தலையங்கம் எழுதியதோடு, தன் அண்ணன் மகன் ஈ.வெ.கி.சம்பத் திருமணத்தையும் அவர் தலைமையிலேயே நடத்தினார்.
ஆனால் அந்த ஆணையும், இடஒதுக்கீட்டுக் கொள்கையும், இன்னொரு புறத்தில் மிகக் கடுமையாக இன்று வரை எதிர்க்கப்படுகின்றன.
2006 ஆம் ஆண்டு வெளிவந்துள்ள, ''Falling over Backwards'' என்னும் தன் நூலில், அருண்சௌரி, இட ஒதுக்கீடுடுக் கொள்கையை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். 1906ஆம் ஆண்டு, இசுலாமியர்கள் இடஒதுக்கீடு கோரிக் கொடுத்த மனுவே, வெள்ளைக்காரர்களால் தயாரிக்கப்பட்டதுதான் என்கிறார் அவர். 'சிம்லாவின் அந்த நாள்தான்' (1911 வரை சிம்லாதான் தலைநகர்) இந்திய மக்களின் மனங்களில் பிரிவினையை விதைத்த நாள் என்பது அவர் கூற்று. இடஒதுக்கீட்டின் பேரில், இந்துக்களிடம் பிரிவினை எண்ணத்தை வெள்ளையர்கள் திட்டமிட்டு உருவாக்கினர் என்றும், 'பிரித்தாளும் சூழ்ச்சியே இடஒதுக்கீடு' என்றும் கோபக் கணைகளை அவர் வீசுகின்றார் அருண்சௌரி ஒரு குறியீடு மட்டுமே. உயர்சாதியினர் என்று தம்மைக் கருதிக் கொண்டிருக்கும் அனைவரின் எண்ணமும் அதுதான்.
நாட்டை ஆளவந்த அந்நியர்கள், உள்நாட்டு மக்களைப் பிரித்தாள முயல்வார்கள் என்பது இயற்கையே. ஆனால் பிரிவினைகளும், ஏற்றத் தாழ்வுகளும் வெள்ளையர்கள் ஏற்படுத்தியவை அல்ல. அவை இந்து மதத்தின் பிரிக்கப்பட முடியாது பகுதிகள் என்பதே உண்மை. அவற்றை அந்நியர் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். எனினும், ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி, அவற்றைப் பேணிப் பாதுகாத்த குற்றவாளிகள் யார் என்பதை நாம் மறைக்க முடியாது.
ஏற்றத்தாழ்வே, ஒரு சமூகத்தின் அடிப்படை வடிவமாக இருக்குமெனில், அதனை உடைத்தெறியும் ஜனநாயகச் சமத்துவக் கடமை புதிய தலைமுறைக்கு உண்டு என்பதையே, இடஒதுக்கீட்டுக் கோரிக்கை நமக்கு உணர்த்துகின்றது.
ஆனாலும், 'ஏற்றத்தாழ்வு' என்னும் நச்சுமரத்தை, 1927ஆம் ஆண்டு 'கம்யூனல் ஜி.ஓ' வால், ஒரே வீச்சில் வெட்டி வீழ்த்திவிட முடியவில்லை. அதன்பின்னும் பல போராட்டங்கள் நடைபெற்றன அல்லது அதன் பிறகுதான் பல போராட்டங்கள் தொடங்கின.
Monday, March 3, 2008
கனவு....காதல்....கொஞ்சம் கடமை! - 8
இதுதான் 'ராம ராஜ்யம்':
பகவத் கீதையை மகாபாரதத்தின் ஒரு பகுதி என்றே நம்மில் பலர் நம்புகின்றோம்.
ஆனால் பகவத் கீதையின் உள்ளடக்கம், மொழி நடை ஆகியனவற்றை ஆராய்ச்சி செய்த வரலாற்றாசிரியர்கள் அக்கருத்தை மறுக்கின்றனர்.
மகாபாரதம் ஒரே நாளில் அல்லது ஒரே காலத்தில் உருவான காப்பியம் அன்று. பல நூறு கிளைக் கதைகளாக மக்களால் அறியப்பட்டு, மெல்ல மெல்ல ஒன்றான பெருங்காப்பியமே அது. அதன் இறுதி வடிவம் அல்லது இன்றைய வடிவம் ஏற்படுவதற்குப் பல்லாண்டுகள் ஆகியிருக்கக்கூடும்.
பகவத்கீதையைப் பொறுத்தமட்டில், கி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டில், இடைச் செருகலாக மகாபாரதத்துள் இணைக்கப்பட்டிருக்கலாம் என்பதே ஆய்வாளர் கருத்து. பகவத் கீதை, கிருஷ்ணனை எல்லாம் வல்ல கடவுளாகக் காட்டுகிறது. மகாபாரதத்திலோ, அவர் ஒரு பாத்திரமாக மட்டுமே படைக்கப்பட்டுள்ளார். ஒரு விருந்தில் கிருஷ்ணருக்குத் தருமர் முன்னுரிமை கொடுக்காததைக் கூட, சிசுபாலன் மிகக் கடுமையாகச் சாடுவதை மகாபாரதத்தில் காண முடிகிறது. சிசுபாலன் போன்ற துணைப் பாத்திரங்களால் கூட விமர்சிக்கப்படுகின்ற சாதாரணப் பாத்திரப் படைப்பாகவே நாம் கிருஷ்ணரைப் பார்க்கின்றோம்.
மேலும், சங்க இலக்கியம், திருக்குறள், சிலம்பு முதலான பழந்தமிழ் இலக்கியங்கள் எவற்றிலும் பகவத் கீதை பற்றிய சிறு குறிப்பும் காணப்படவில்லை. அன்று நிலவிய சமயங்கள், சமயக் கோட்பாடுகள் ஆகியன குறித்து விவாதிக்கும் மணிமேகலை கூட, பகவத்கீதை பற்றி எதுவும் பேசவில்லை. எனவே அது ஒரு பிற்காலப் படைப்பே என்பது தெளிவாகின்றது.
பிற்காலத்தில் அப்படி ஓர் இலக்கியம் ஏன் தேவைப்பட்டது என்பதற்கான காரணங்களும் தெளிவாக உள்ளன. வருணக் கலப்பில் பிறந்த குழந்தைகள் பஞ்சமர்களாகவும், சண்டாளர்களாகவும் ஆக்கப்பட்டு, சமூக விலக்கலுக்கு ஆளாக்கப்பட்டதைப் பார்த்தோம்.
திருமணங்களால் மட்டுமின்றி தம் வருணங்களுக்கு உரிய தொழில்களைக் கைவிட்டு, வேறு வருணத்தார்க்கு உரிய தருமங்களைக் மேற்கொள்வதாலும் வருணங்கள் உடைபடுகின்றன. அதனைத் தடுப்பதற்கு ஒரு வலிமையான ஆயுதம் தேவைப்பட்டது. அதுவே பகவத் கீதை.
பகவத் கீதையில் பல்வேறு கருத்துகளும், தத்துவங்களும் கூறப்பட்டுள்ளன என்று கூறுவர். ஆனால் அவை அனைத்துக்கும் மைய இழையாக, சாரமாகக் கூறப்பட்டுள்ள செய்தி, ''சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்'' என்பதே ஆகும். அதாவது, 'சதுர் (நான்கு) வருணங்களும், என் படைப்பே (சிருஷ்டி)' என்று கிருஷ்ணர் கூறுவதாக அமைக்கப்பட்டுள்ள வரியே கீதையின் சாரம். இந்நிலை, கீதையில் எவ்வாறு படிப்படியாக நிறுவப்பட்டுள்ளது என்பதை நாம் அறிய வேண்டும்.
ஏழாவது இயல், 16ஆம் பத்தியில், கிருஷ்ணர் தன் பக்தர்களை நான்கு வகையாகப் பிரிக்கின்றார். அங்குதான் நால்வருணக் கோட்பாடு உறுதி செய்யப்படுகின்றது. ஒவ்வொரு வகையினருக்கும் ஒவ்வொரு விதமான தருமம் அறிவுறுத்தப்படுகின்றது.
எனினும், 9ஆவது இயலில், ''என் வெறுப்புக்கு உரியவர் என்றோ, விருப்பிற்கு உரியவர் என்றோ எவரும் இல்லை''('None is hateful to me, none dear') என்று கிருஷ்ணர் கூறும்போது, ஒரு விதமான 'சமத்துவம்' தென்படுகின்றது. ஆனால், 12-வது இயலிலேயே, 'அர்ஜீனன் என் மிகுந்த விருப்பத்திற்கு உரியவன்' என்று அவர் கூறுவது சுயமுரணாக உள்ளது.
பின்பு, தம் வருண தர்மத்தைச் செய்யாதவர்களைத் தாம் ஏற்பதில்லை என்கிறார். அது மட்டுமல்லாமல், வருண ஏற்பாட்டை ஏற்காதவர்கள் முக்தி (நஹப்ஸ்ஹற்ண்ர்ய்) அடைய முடியாது என்றும் கூறுகின்றார்.
''ஒரு சூத்திரன், எவ்வளவு சிறந்த பக்திமானாக இருந்தாலும், அவன் தனக்குரிய தருமத்தை (அதாவது மற்ற வருணத்தார் மூவருக்கும் ஏவல் தொழில் செய்வதை) முறையாகச் செய்யவில்லையெனில், அவனுக்கு ஒரு நாளும் முக்தி கிடையாது'' என்கிறார் கிருஷ்ணர்.
எனவே பகவத்கீதை, வருண தருமத்திற்கு ஏற்ப வாழ்வதையே சிறந்த பக்தி மார்க்கமாகக் கூறுகின்றது. கடவுளை வணங்கு, கடவுளுக்குத் தொண்டு செய் என்பதற்குப் பதிலாக, மேல் வருணத்தாரை வணங்கு, அவர்களுக்குத் தொண்டு செய் என்று கீதை வலியுறுத்துகின்றது.
இந்தக் காரணத்தினால்தான், ''பகவத் கீதை, இந்துக்களின் புனித நூல்'' என்று 'மேல் வருணத்தார்' திரும்பத் திரும்பக் கூறுகின்றனர். இந்துக்கள் அனைவருக்கும் கிருஷ்ணன் மட்டும்தான் கடவுளா? சிவன், முருகன் போன்றவர்கள் கடவுளர்கள் இல்லையா? பகவத் கீதை மட்டும்தான் புனித நூலா? திருமுருகாற்றுப்படை புனித நூல் இல்லையா?
எனவே இங்கு முன் நிறுத்தப்படுவது கடவுள் அன்று, அவர் பெயரால், அவரால் படைக்கப்பட்டதாகக் கூறப்படும் நான்கு வருணங்களும், அவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள தருமங்களுமே என்பதை உணரலாம்.
வருண தருமத்தை யாரும் மறுக்கக் கூடாது என்பதும் கீதையில் முன்நிபந்தனையாகக் கூறப்பட்டுள்ளது. மூன்றாவது இயலில் உள்ள 26ஆவது பாடல், ''இங்கு கூறப்படும் கருத்துகள் மீதான எந்த சந்தேகத்தையும், அப்பாவி மக்களிடம், புத்திசாலிகள் ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது'' என்று ஆணையிடுகின்றது.
இராமாயணத்திலும் வருண தருமத்தைப் பாதுகாக்கக் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கம்பர், யுத்தகாண்டம் வரை மட்டுமே இராமாயணத்தை எழுதியுள்ளார். இராமர் அரசராகப் பதவியேற்கும் ('பட்டாபிஷேகம்') காட்சியோடு, கம்ப இராமாயணம் நிறைவடைகின்றது. எனவே 'ராமராஜ்யம்' எப்படியிருந்தது என்பதைக் கம்பர் மூலம் நாம் அறிய முடியாது. அதனை அறிந்துகொள்ள, மூல நூலான வால்மீகி ராமாயணத்திற்கு நாம் செல்ல வேண்டும்.
யுத்தகாண்டத்திற்கு அடுத்ததாக வால்மீகி படைத்துள்ள காண்டம் உத்தரகாண்டம். அக்காண்டத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
ஒருநாள் அரசர் இராமர் அரசவையில் அமர்ந்திருக்கும்போது, பார்ப்பனச் சேரியைச் சேர்ந்த சிலர் அங்கு வருகின்றனர். தங்கள் குழந்தை ஒன்று திடீரென இறந்து விட்டதாகவும், சம்பூகன் என்னும் ஒரு சூத்திரன் அருகிலுள்ள வனம் ஒன்றில் தவம் மேற்கொண்டிருப்பதே அதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்றும் கூறுகின்றனர்.
அதைக்கேட்ட இராமர் மிகுந்த சினம் கொள்கின்றார். 'சூத்திரன் ஒருவன், பிராமணர்களுக்கு உரிய தருமமான தவத்தை மேற்கொள்வதா? என் ஆட்சியில் இப்படி ஓர் அவச் செயலா' எனச் சொல்லி, 'வாருங்கள், அவன் தவம் செய்யும் காட்சியைக் காண நானே நேரில் வருகிறேன்' என்று புறப்படுகின்றார்.
அவர்கள் அந்த இடத்திற்கு இராமரை அழைத்துச் செல்கின்றனர். அங்கே சம்பூகன் தவம் செய்யும் காட்சியை அவரே நேரடியாகக் காண்கின்றார்.
சம்பூகனைப் பார்த்து, ''தவத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவன் வாய்மை தவறக் கூடாது. சொல், நீ எந்த வருணத்தைச் சேர்ந்தவன்'' என்று கேட்க, தான் ஒரு சூத்திரன் என்று விடை பகர்கின்றான்.
உடனே தன் வாளை உருவிய இராமர், அந்த இடத்திலேயே அவன் தலையைக் கொய்து விடுகிறார். சம்பூகளைக் கொன்று, வருணாசிரமதர்மத்தைக் காப்பாற்றி விடுகிறார்.
கவனத்தில் வையுங்கள் - இதுதான் 'ராம ராஜ்யம்'.
மானசீனமாகத் துரோணரை ஆசிரியராகக் கொண்டு, வில்வித்தை பயின்ற ஏகலைவனின் கட்டைவிரல் வாங்கப்பட்டதும், வருணாசிரமத்தைக் காப்பதற்குத்தான்!
ஒரு பக்கம், வருணங்களை - அறிவது மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளை - நான்தான் படைத்தேன் என்கிறார் கிருஷ்ணர்.
இன்னொரு பக்கம், வருணத்தைக் காப்பதற்காகச் சம்பூகன் தலையை வெட்டுகின்றார் இராமர்.
இவ்வாறு கடவுளால் உருவாக்கப்பட்டு, கடவுளால் காப்பாற்றப்படுவதுதான் வரணதர்மம் என்று அழுத்தமாக் கூறிவிட்ட பிறகு, கடவுளின் படைப்பை, கடவுளின் ஆணையைச் சாதாரண மனிதனால் எப்படி மீற முடியும்?
மனிதர்கள் அடங்கிப் போனார்கள். விரும்பியோ, விரும்பாமலோ வருணத்தை, அதற்கான தருமத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
தொடக்க காலத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருணம் தீர்மானிக்கப்பட்டது. பிறகு, பிறவி முழுவதும் ஒரே வருணம்தான் என்றானது. காலப்போக்கில், தலைமுறை தலைமுறைக்கும் வருணம் மாறாதது என்று ஆக்கப்பட்டது.
வருணம் இறுகிச் சாதியாக ஆனது. சாதிகளுக்குள் பல பிரிவுகள் ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான உட்சாதிகள் தோன்றின. உட்சாதிகளுக்குள் கூட கொள்வினை, கொடுப்பினை மறுக்கப்பட்டு, 'அகமணம்' உறுதி செய்யப்பட்டது.
சாதிக்கு ஒரு நீதியும், சாதிக்கு ஒரு தொழிலும் சமூகச் சட்டங்களாயின. சாதிகளோடு தொழில்கள் பிணைக்கப்பட்டதால், சாதிகளுக்குக் கற்பிக்கப்பட்ட அனைத்து ஏற்றத் தாழ்வுகளும், தொழில்களுக்கும் பொருத்தப்பட்டன. இந்தத் தொழில் உயர்ந்தது, இந்தத் தொழில் தாழ்ந்தது என்னும் மனப்பான்மை எங்கும் பரவியது.
'நம்ம சாதியல பொறந்திட்டு, இந்தத் தொழில் செய்யலாமா நீ?' என்பன போன்ற பேச்சுகள் இன்றும் நம் காதுகளில் விழக் கேட்கின்றோம். எனவே, வேலையில்லாமல் வேண்டுமானாலும் இருக்கலாம், 'இழிசாதியினருக்குரிய இழி தொழிலைச் செய்யக் கூடாது' என்னும் இழிவான எண்ணம் இளைஞர்களிடையே தோன்றியது.
இப்போது ஒரு தொழிலில், பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனரே... அரசுப் பணிகளில் ஆயிரம் சாதியினர் இல்லையா!... ஆசிரியர்கள் அனைவரும் ஒரே சாதியா என்றெல்லாம் கேட்கலாம்.
சாதிக்கும், தொழிலுக்குமான உறவு இப்போது பெரிதும் உடைபட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால் இன்றும், மேலும், கீழும் சாதிலிதொழில் உறவு இருக்கத்தான் செய்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
கோயில்களில் அர்ச்சகர்களாக இருப்பவர்கள் இன்று வரை ஒரே சாதியினர்தானே? (வருங்காலத்தில் நிலைமை மாறலாம்). அதேபோல, பிணம் எரிப்பவர்களும், செருப்புத் தைப்பவர்களும், சாக்கடை சுத்தம் செய்பவர்களும் ஒரே ஒரு குறிப்பிட்ட சாதியினர்தானே?
இடைநிலைகளில் - அரசுப் பணி, ஆசிரியப் பணி போன்றவற்றில் - ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கூட ஒரே இரவில் ஏற்பட்டுவிடவில்லை. அதற்காக இங்கே ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளன.
அவற்றுள் ஒன்றிரண்டையேனும் நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?
Wednesday, February 20, 2008
கனவு....காதல்....கொஞ்சம் கடமை! - 7
சாதி, மதம், மொழி, எல்லாவற்றையும் மீறி, ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்படுவது, அன்றிலிருந்து இன்றுவரை இயல்பான ஒன்றே, அதனால்தான் காதலை 'உயிரியற்கை' என்றார் பாரதிதாசன்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, காதலானது வருணச் சுவர்களை இடித்துத் தகர்க்கத் தொடங்கியது. வருணக் கலப்பில் குழந்தைகள் பிறக்கத் தொடங்கினர்.
எனவே, வருணங்களுக்கிடையிலான சுவர்களை, மேலும் வலிமையாகக் கட்டிட வேண்டிய தேவை, மேல்வருணத்தினர் எனப்பட்டோருக்கு அன்று ஏற்பட்டது.
வருணக் கலப்பு, மிகக் கடுமையான குற்றமாக அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் பிறந்த குழந்தைகள் பஞ்சமர் (தலித்) என்றும், சண்டாளர் என்றும் பெயர் சூட்டப்பட்டு, வருணங்களுக்கு வெளியில், அதாவது வருணங்கள் அற்றவர்களாக நிறுத்திவைக்கப்பட்டனர். 'அவருணத்தார்' என அவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு, பாராமை, நெருங்காமை, தீண்டாமை ஆகிய மூன்று கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன.
ஒரே மாதிரியாகப் பார்க்கப்படவில்லை. பார்ப்பன, சத்திரியக் கலப்பையும், பார்ப்பனலிவைசியக் கலப்பையும், சத்திரியலிவைசியக் கலப்பையும் விட, சத்திரியலிசூத்திரக் கலப்பும், வைசியலிசூத்திரக் கலப்பும் கூடுதல் குற்றமாகக் கருதப்பட்டன. எல்லாவற்றையும்விட பார்ப்பனலிசூத்திரக் கலப்பு, பெரும் பாவமாகவே அறிவிக்கப்பட்டது. மற்றவர்கள் பஞ்சமர்கள் என்றும், பார்ப்பனப் பெண்ணுக்கும், சூத்திர ஆணுக்கும் பிறந்த மக்கள் சண்டாளர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
பஞ்சமர்கள் தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்டனர். சண்டாளர்களோ, நெருங்காமை, பாராமை போன்ற கூடுதல் கொடுமைகளுக்கும் ஆளாயினர். பஞ்சமர், சண்டாளர் அனைவரும் ஊருக்கு வெளியில், சேரிகளில்தான் வாழ வேண்டும். அவர்களைத் தொட்டாலே தீட்டு என்றனர். அவர்கள் அனைவரும், மனிதரிலும், ஏன் விலங்குகளிலும், கீழானவர்களாக நடத்தப்பட வேண்டும் என்பது இந்து மதத்தின் எழுதப்படாத சட்டங்கள் ஆயின. அதனால்தான் நாய், மாடு போன்ற விலங்குகளைக்கூடத் தொடும் மனிதர்கள், சாதியின் பெயரால், மனிதர்களைத் தொட்டால் தீட்டு என்று கருதும் இழிவான மனப்பாங்கு இன்றும் உள்ளது.
சண்டாளர்களுக்கு விதிக்கப்பட்ட நடைமுறைகளோ, மிகக் கொடுமையான தண்டனைகள். ''அவர்கள் உடைந்த மட்பாண்டங்களிலே மட்டுமே உணவு உண்ண வேண்டும். பித்தளை, இரும்பில் மட்டுமே அணிகலன்கள் அணியவேண்டும். பிணங்களுக்குப் போர்த்திய துணிகளை மட்டுமே ஆடைகளாக உடுத்திக்கொள்ள வேண்டும்.'' என்னும் காட்டுமிராண்டிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன.
'சண்டாளன்' என்னும் சொல்லை நாம் வேடிக்கையாக, அடப்பாவி சண்டாளா என்று இன்றும் பயன்படத்துகிறோம். ஆனால் அது ஒரு வேடிக்கையான வசைச்சொல் அன்று.
மிகக் கொடூரமான, மனிதர்களை இழிவுபடுத்தும், வருண அடுக்கைக் காப்பாற்றப் பிறந்த சொல் அது.
இத்தீண்டாமைக் கோட்பாடு, கி.பி.5ஆம் நூற்றாண்டு அளவில், பாலாத்தியன் என்னும் மன்னன் ஆட்சிக்காலத்தல், திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பதை அம்பேத்கர் தன் ஆய்வில், வலிமையான சான்றுகள் மூலம் நிறுவியுள்ளார்.
இவையெல்லாம் பழங்கதைகள். இப்போது பாராமை, நெருங்காமை எல்லாம் எங்கு உள்ளன? ஏன் பழையன குறித்து இப்போது நாம் பேச வேண்டும் என்று இளைஞர்கள் சிலர் வினாக்களைத் தொடுக்கின்றனர்.
இன்றைக்கும், அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய யுகத்திலும், தீண்டாமை உள்ளதா, இல்லையா? ஒவ்வொரு கிராமத்திற்கும் வெளியில் ஒரு சேரி உள்ளதா, இல்லையா? தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான சிற்றூர்களில் 'இரட்டைக் குவளைகள்' நடைமுறையில் காணப்படுகின்றனவா, இல்லையா?
இவையெல்லாம் மனிதகுல வரலாற்றின் அநாகரிகச் சின்னங்கள் என்னும் கோபமும், கொந்தளிப்பும் நமக்குள் ஏன் ஏற்படவில்லை?
மாநகரங்களில், கணிணித் தொழில்நுட்பக் கண்ணாடி மாளிகையில் சாதியும், தீண்டாமையும் எங்கே உள்ளது என்று கேட்கலாம். அங்கும் கூட, மனித மனங்களில் சாதி அழுக்கு ஒட்டிக் கொண்டிருக்கிறதா, இல்லையா என்பதை மனச்சாட்சி உள்ளவர்கள் உரத்துச் சொல்லுங்கள். திருமணம் என்று வரும்போது, குலம், கோத்திரம், சாதி, உட்சாதி அனைத்தும் பார்க்கப்படுகிறது என்பதுதானே நடைமுறையாக உள்ளது. பிறகு எப்படி, மாநகரங்களில் சாதி ஒழிந்துவிட்டதாகக் கருத முடியும்?
வருணத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த நாம், திடீரெனச் சாதிக்குள் வந்துவிட்டதாக எண்ணத் தேவையில்லை. வருணத்திலிருந்தே சாதிகளும், பிறகு உட்சாதிகளும் தோன்றின என்பது சமூக வரலாறு. அதனால்தான் இந்து மதம் என்பது, வருண சாதி அமைப்பைத் தன் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
இந்த இடத்திலும் சில இளைஞர்கள் என்னோடு ஒரு மோதலுக்குத் தயாராவார்கள் என்பதை நான் அறிவேன். ஏன் எப்போது பார்த்தாலும் இந்து மதத்தையே சாடுகின்றீர்கள், பிற மதங்களில் பிரிவினையோ, குறைபாடுகளோ இல்லையா என்பது நெடுநாளாகத் தொடுக்கப்பட்டு வரும் வினா. 'இந்து மத துவேஷிகள்' என்பது எம் போன்றோருக்கு இலவசமாக வழங்கப்பட்டிருக்கும் பட்டம்.
எல்லா மதங்களிலும் பிரிவுகள் உள்ளன என்பதை யார்தான் மறுக்க முடியும்? கத்தோலிக்கம், பிராட்டஸ்டண்ட் என்று கிறித்தவ மதமும், சன்னி, ஷியா என்று இஸ்லாமிய மதமும், மஹாயானம், ஹீனயானம் என்று பௌத்த மதமும் பிளவுப்பட்டு நிற்பது உண்மைதான். வேறு பல மதங்களிலும் இவைபோன்றும், இன்னும் பலவாறாகவும் பிரிவுகள் இருக்கவே செய்கின்றன.
ஆனால் இவற்றிற்கும், இந்து மதத்தில் உள்ள சாதிப் பிரிவுகளுக்குமிடையே உள்ள வேறுபாடுகள் முற்றிலும் வேறானவை. மற்ற மதங்களுக்கிடையே உள்ள பிரிவுகளுக்குள் பகையே கூட உள்ளது. ஆனால் அங்கு ஏற்றத்தாழ்வோ, தீண்டாமையோ கற்பிக்கப்படவில்லை என்பதே முதன்மையானது. அந்தப் பிரிவுகளுக்குக் காரணம் கோட்பாடுகளும், வழிபாட்டு வேறுபாடுகளும், அதிகாரப் போட்டிகளும், வேறுபட்ட நம்பிக்கைகளுமே ஆகும். பிறப்போ, வருணமோ காரணங்கள் இல்லை.
அந்தப் பிரிவுகள் எத்தகையன எனில், இந்து மதத்திற்குள் உள்ள சைவ, வைணவ, சாக்த, காணபத்யப் பிரிவுகளைப் போன்றவை. அவை போன்ற பிரிவுகள் இந்து மதத்தில் இன்னும் எண்ணற்றவையாக உள்ளன. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்களைக் கூட, இந்து மதத்தில் உட்பிரிவுகளாகவே இந்திய அரசமைப்புச் சட்டம் இன்றும் கூறுகிறது. கிறித்தவம், இஸ்லாமியம், பார்சி ஆகிய மூன்று மதங்களைத் தவிர, மற்றவை அனைத்தும் இந்து மதத்தின் உட்கூறுகள் என்றே சட்டம் சொல்கிறது. அவர்களுக்கிடையே ஏற்படும் சட்டச் சிக்கல்கள் அனைத்தும் 'இந்துச் சட்டத்தின்' கீழ்தான், நீதிமன்றங்களில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
ஆதலால், இந்து மதம் உள்ளிட்ட பல்வேறு மதங்களில் காணப்படும் உட்பிரிவுகளையும், வருண லி சாதி அடுக்கையும் நாம் ஒப்பிடுவது முறையாகாது. இவை மனித நேயமற்ற, மனித நாகரீகத்திற்கும், அறிவியல் வளர்ச்சிக்கும் புறம்பாகக் கற்பிக்கப்பட்டுள்ள இழிவு என்பதை இளைய தலைமுறையினர் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் இன்றைய நிலையிலும் வருணப் பிரிவை ஆதரிக்கின்றவர்கள் இருக்கவே செய்கின்றனர். காந்தியடிகளே, தீண்டாமையை மிகக் கடுமையாக எதிர்த்த போதிலும், வருணங்களை ஏற்கவே செய்தார். வருணம் என்பதைத் தொழில் பிரிவாகக் கருதியதே அதற்கான காரணம். உலகில் அனைவரும் ஒரே தொழிலைச் செய்து கொண்டிருக்க முடியாது. பலரும் பல்வேறு தொழில்கள் புரிவதன் முலமே, உலக இயக்கம் நடைபெறும். ஆகவே வருணங்கள் இருப்பதில் பிழை இல்லை என்று காந்தியடிகள் கருதினார்.
மனிதர்கள் மாறுபட்ட தொழில்களில் ஈடுபடுவதைச் சரியானது என்றே நாமும் கருதுகின்றோம். எனினும், வருணம் என்பது தொழில் பிரிவினையை மட்டும் சுட்டி நிற்கவில்லை. அத்தொழில்களுள் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கின்றது. மேலும் அப்பிரிவைப் பிறப்போடு தொடர்புபடுத்துகின்றது.
யாரெல்லாம் போர் புரிகின்றனரோ, அவர்கள் சத்திரியர் என்றும், யாரெல்லாம் வணிகம் செய்கின்றனரோ அவர்கள் வைசியர் என்றும் கூறப்படவில்லை. போர் புரிந்தாலும, இல்லையென்றாலும், வீரம் மிக்கவனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அரச குடும்பத்தில் பிறக்கும் அனைவரும் சத்திரியர்களே. எவ்வளவுதான் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினாலும், உழைக்கும் மக்கள் வீடுகளில் பிறக்கும் அனைவரும் சூத்திரர்களே. அதாவது, ஒருவனின் வருணம், அவனது குணநலன்களைக் கொண்டோ, தகுதி, திறமைகளைக் கொண்டோ தீர்மானிக்கப்படுவதில்லை. அவனது பிறப்பைக் கொண்டே முடிவு செய்யப்படுகின்றது.
வருண அமைப்பு, தமிழகத்துள் புகத் தொடங்கிய அந்த நாட்களில், அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், சில நெகிழ்வுகள் காணப்படுகின்றன. ''வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின்'', அவனும் மேற்பாலாகக் கருதப்படுவான் என்கிறது ஒரு புறநானூற்றுப் பாடல். அன்றைக்கே, வேற்றுமைகள் நிறைந்த நான்கு வருணங்கள் இருந்திருக்கின்றன என்பதும், அவற்றுள் மேல், கீழ் என்னும் வேறுபாடுகளும் இருந்திருக்கின்றன என்பதும் தெளிவாகின்றது. இருந்தபோதிலும், கீழ்ப்பால் ஒருவனும் கற்க முடிந்துள்ளது என்பதோடு, அந்தக் கல்வி அவனை மேல்நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது என்பதே அப்பாடல் மூலம் நாம் அறிந்திடும் செய்தி. பிறப்பின் அடிப்படையில் அல்லாமல், தகுதியைக் கொண்டே, மேல், கீழ் என்பன முடிவாகியிருக்கின்றன என்பது உறுதியாகின்றது.
பிறப்பினால் உயர்வு, தாழ்வு கற்பிக்கப்படுவதை எதிர்க்கும் முதல் இலக்கியமாகத் திருக்குறள் நமக்குக் கிடைத்துள்ளது. ''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்கிறது குறள். அது மட்டுமல்லாமல், அக்குறளின் அடுத்த வரி, செய்தொழிலில் உள்ள வேற்றுமையால் சிறப்பு வந்து சேர்ந்துவிடாது என்கிறது. 'வருணதர்மத்திற்கு' எதிரான முதல் குரலாக குறள் அன்று ஒலித்துள்ளது.
இத்தகைய எதிர்ப்புக் குரல்கள் இன்னும் பலவாக அன்று இருந்திருக்கக்கூடும். ஆனால் அந்நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லை. எத்தனையோ நூல்கள் அழிந்துபோய் உள்ளன. அழிக்கப்பட்டும் உள்ளன. அப்படி சுவை ஆகியிருக்கக்கூடும்.
எவ்வாறாயினும் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டிய தேவையும், வருணத்தை நிலைநாட்ட வேண்டிய தன்னவமும் எழுந்த வேளையில் வருணக் கலப்பைத் தடுப்பதற்கு வெறும் தண்டனைகள் மட்டும் போதுமானவையாக இல்லை. கடவுளின் பெயரால் வருணங்களையும், அவற்றுக்கிடையே எழுப்பப்பட்ட ஏற்றத்தாழ்வுகளையும் நியாயப்படுத்துவதே சிறந்த வழி என்று கருதியிருக்க வாய்ப்புண்டு.
அந்தக் கருத்தின் இலக்கிய வடிவமே, ''பகவத் கீதை'' என்று சொன்னால், சிலர் அதிர்ச்சியடையக் கூடும். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அதிரிச்சியடையக் கூடாது.
Tuesday, February 12, 2008
கனவு....காதல்....கொஞ்சம் கடமை! - 6
உலகில் நம் ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதமான அடையாளங்கள் உள்ளன.
'நீங்கள் யார்?' என்னும் ஒரு கேள்விக்கு எத்தனையோ விடைகள் சொல்லப்படலாம்.
இந்தியர், அமெரிக்கர், சீனர் என்றும், தமிழர், தெலுங்கர், வங்காளி என்றும், இந்து, முஸ்லீம், கிருத்துவர் என்றும், ஆசிரியர், தொழிலாளி, எழுத்தாளர் என்றும், பள்ளர், முதலியார், நாடார் என்றும் இன்னும் பலவாறாகவும் நாம் நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். நாடு, மொழி, மதம், தொழில், சாதி என்னும் அடிப்படையில் மேற்காணும் அடையாளங்கள் கூறப்படுகின்றன. உறவுகளின் அடிப்படையில் அப்பா, அண்ணி, அத்தை என்றும் விடை கூறலாம்.
எல்லாம் அடையாளங்கள்தான். ஆனால் இவை அனைத்திலிருந்தும் 'சாதிய அடையாளம்' வேறுபட்டிருப்பதை, நுட்பமாகப் பார்த்தால் அறிய முடியும். எல்லைக் கோடுகளின் அடிப்படையில் நாடும், மொழி அடிப்படையில் தேசிய இனமும், நம்பிக்கைகளின் அடிப்படையில் மதமும், பணி அடிப்படையில் தொழிலும் தீர்மானிக்கப்படுகின்றன. சாதியோ, பிறப்பின் அடிப்படையில் முடிவாகின்றது.
நாடு, மொழி, மதம் ஆகியன அடுத்தடுத்து நிற்கும் வரிசை (ஐர்ழ்ண்க்ஷ்ர்ய்ற்ஹப் ப்ண்ய்ங்). சாதி அமைப்போ, ஒன்றின் கீழ் இன்னொன்று என வைக்கப்பட்டிருக்கும் அடுக்கு (யங்ழ்ற்ண்ஸ்ரீஹப் கண்ய்ங்).
ஒவ்வொருவரும் தங்களின் நாடு, மொழி ஆகியனவற்றை உயர்வாகக் கருதியும், பேசியும் வருவது இயல்பே என்றாலும், இந்த மொழி உயர்ந்தது, இந்த மொழி தாழ்ந்தது என்று எங்கும் எப்போதும் எந்த முடிவும் இல்லை. தொழில் அமைப்பும் கூட அவ்வாறானதே.
ஆனால், சாதி மட்டுமே மிகத் தெளிவாக மேல் ஜாதி, கீழ் ஜாதி எனப் பிரிக்கப்பட்டுள்ளது. பிறப்பே அடிப்படை, ஏற்றத்தாழ்வே உள்ளடக்கம் என்னும்போக்கில் நிலை பெற்றிருப்பதும், இந்த இரண்டினால் மட்டுமே உயிர்வாழ்வதும் சாதியாகும்.
சாதி என்னும் இந்த அமைப்பு, இந்தியாவில் மட்டுமே உள்ளது என்பது இன்னொரு செய்தி. சிறீலங்காவில், பாகிஸ்தானில், பர்மாவில், பங்களாதேசத்தில் சாதி உள்ளதே என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான் அந்த நாடுகளிலும் சாதியப் பாகுபாடுகள் இருக்கவே செய்கின்றன. காரணம், அந்நாடுகளும் ஒரு காலத்தில் இந்தியாவோடு இணைந்திருந்தன என்பதை மறந்துவிடக் கூடாது.
எனவே, இந்தியாவிலும், இந்தியாவாக இருந்த நாடுகளிலும் மட்டுமே சாதி உள்ளது. வேறு எங்கும் இல்லை. மேலை நாடுகளில் உள்ள நிறவெறி சாதியோடு ஒத்தது என்னும் கருத்தையும் நாம் புறந்தள்ள முடியாது. இரண்டும் ஒழிக்கப்பட வேண்டியவையே.
சாதியின் தாய் வருணம் என்று கூறலாம். பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால்வருணப் பிரிவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பார்க்க முடிகின்றது.
இந்திய வரலாற்றில் மௌரியர் ஆட்சி முடிந்து, தங்கர்களின் ஆட்சி தொடங்கும்போது, புஷ்யமித்திர சுங்கனின் ஆட்சியில், மனு என்னும் புனைப் பெயரைக் கொண்ட சுமதி பார்கவா என்பவரால் எழுதப்பட்ட நூலே 'மனுநீதி' என்பதாகும். இந்த மனுநீதிதான், ஒவ்வொரு வருணத்திற்கும் ஒவ்வொரு நீதியைச் சொல்கிறது.
ஒரு குறிப்பிட்ட குற்றத்தைச் சூத்திரன் செய்திருந்தால், அவனுக்குச் 'சிரச்சேத'த் தண்டனையை வழங்கும் மனுநீதி, அதே குற்றத்தை ஒரு பார்ப்பனன் செய்தால் அவன் தலையை மொட்டையடித்தால் போதும் என்கிறது.
இவ்வளவு ஒருதலைப்பட்சமாக நீதி வழங்கப்பட்டிருக்குமா என்ற ஐயம் இளைஞர்களுக்கு வரக்கூடும். அவ்வாறு சந்தேகிப்பது மகிழ்ச்சிக்குரியதே. ஆனால், சந்தேகிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், அவர்கள் உடனே அதைச் சரிபார்க்க வேண்டும் என்பதே நம் விருப்பம். முன்பு வடமொழியில் மட்டும் இருந்த மனுநீதி, இப்போது ஆங்கிலம், தமிழ் எனப் பல மொழிகளிலும் பெயர்க்கப்பட்டு, நூல் வடிவில் வெளிவந்துவிட்டது. சரிபார்த்துக் கொள்வதில் எந்தச் சிரமமுமில்லை.
ஏன் ஒரு வருணத்துக்கு ஒரு நீதி வழங்கப்பட்டது எனில், ஒவ்வொரு வருணமும் ஒன்றின் கீழ் இன்னொன்றாக அடுக்கப்பட்டிருப்பதே காரணம். அப்படி அடுக்கியவர்கள் யார் என்ற கேள்வி அடுத்து எழுவதும் நியாயமே!
இந்து மதத்தின் அடிப்படை ஸ்ருதியும், ஸ்மிருதியும் என்று கூறுவர், ஸ்ருதி என்பது வேதங்கள், உபநிடதங்கள், ஆரண்யங்கள், பிராமணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஸ்மிருதி என்பது புராண, இதிகாசங்களின் தொகுப்பு.
இவை அனைத்துள்ளும் வேதங்களே தொன்மையானவை.
அவை ரிக், யஜீர், சாம, அதர்வனம் என நான்கு வகைப்படும். இவற்றுள் முதலாவது வேதமான ரிக் வேதத்தின் 10ஆவது அத்தியாயமான 'புருஷசூக்தம்' என்னும் இயலில்தான், நால்வருணப் பிரிவு பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. பிரம்மத்தின் தலையிலிருந்து தோன்றியவர்கள் பிராம்மணர்கள் என்றும், தோளில் பிறந்தவர்கள் சத்திரியர்கள் என்றும், இடையில் தோன்றியவர்கள் வைசியர்கள் என்றும், பாதத்தில் பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும் இந்துமத வேதம் சொல்கிறது.
தலையில் பிறந்தவர்கள், அறிவு தொடர்பான கல்வி கற்க உரியவர்கள் என்பதும், தோளில் பிறந்தவர்கள் வீரம் தொடர்பான போருக்கு உரியவர்கள் என்பதும், இடையில் பிறந்தவர்கள் செல்வம் தொடர்பான வணிகத்திற்கு உரியவர்கள் என்பதும், கால்களில் பிறந்தவர்கள் உழைப்பு தொடர்பான ஏவல் வேலைகளுக்கு உரியவர்கள் என்பதும், அதே புருஷ சூக்தம் தரும் செய்திகள்.
இவ்வாறாகத்தான், பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன.
எனினும் இந்த ஏற்றத்தாழ்வுகளை மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை. தான் தாழ்ந்தவன் என்பதைச் சுயமரியாதை உள்ள யார் ஏற்றுக்கொள்வார்கள்?
எனவே கட்டுப்பாடுகளை மீறி வருணக் கலப்புகள் நடந்தன. வெவ்வேறு வருணங்களைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் உடலுறவு கொண்டு, பிள்ளைகளைப் பெற்றெடுத்தபோது, அவர்களை எந்த வருணத்தில் சேர்ப்பதென்னும் பெரிய கேள்வி எழுந்தது.
அது மட்டுமல்லாமல், ஒரு வரணத்திற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள தொழிலை (அதாவது, தருமத்தை), இன்னொரு வருணத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கொள்ளத் தொடங்கினர்.
அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளதுதான் விசுவாமித்திரன் கதையும், பரசுராமன் கதையும்.
விசுவாமித்திரனின் இயற்பெயர் கௌசிகன். அவன் ஒரு மன்னன். எல்லா அதிகாரங்களும் தனக்கே உரியவை என்று கருதியவன். அதன்விளைவாக, அம்மன்னனுக்கும், அந்நாட்டில் இருந்த வசிஷ்டர் என்னும் பார்ப்பன ரிஷிக்குமிடையே ஒரு மோதல் உருவாயிற்று. வசிஷ்டரிடமிருந்த 'காமதேனு' என்னும் பசுவும் தன் ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்டது என்று, கௌசிக மன்னன் கூறியபோது, வசிஷ்டர் வெகுண்டெழுந்தார். இருவருக்குமிடையே தோன்றிய பகையில், சத்ரியனான கௌசிகனின் தோள் வலிமையை பார்ப்பனனான வசிஷ்டரின் தவ வலிமை வென்று விட்டது. எனவே, கௌசிக மன்னனும், தவம் செய்து பெரு வலிமையைப் பெற எண்ணினான். கடுந்தவமும் செய்தான். இறுதியில் 'வசிஷ்டரின் வாயால் ராஜரிஷி' என்னும் பெயரையும் பெற்றான். அப்போதும் கூட, பிரம்மரிஷி பட்டம் வழங்கப்படாமல், ராஜரிஷி என்னும் ஆறுதல் பரிசே வழங்கப்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும்.
எவ்வாறோ, சத்திரிய வருணத்திலே பிறந்த கௌசிகன், பார்ப்பன வருணத்திற்குரிய தர்மமான தவம் புரிந்து, விசுவாமித்திரன் ஆனான். வருண தர்மம் இங்கு தவறிப்போனது.
நேர்மாறாக, பார்ப்பன வருணத்திலே பிறந்த பரசுராமன், ஆயுதம் ஏந்தி மன்னர்களோடு போரிட்டு வென்றான். இங்கும் வருண தருமம் பிழைத்துப் போயிற்று.
எனவே, வருணம் மாறி ஏற்பட்ட ஆண், பெண் உறவினாலும், வருணம் மாறி மேற்கொண்ட தொழிலாலும், வருணாசிரம தர்மம் ஆட்டம் கண்டனது. மேல், கீழ் என்னும் அடுக்குகள் சிதையத் தொடங்கின.
இதனால், வருண அடுக்கின், மேல் தட்டில் இருந்தவர்களின் நிலை கவலைக்குள்ளானது. தங்களின் வசதியான மேல் நிலையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற தவிப்பு அவர்களிடம் மேலோங்கியது.
அதன் விளைவாகவே, கி.பி.5ஆம் நூற்றாண்டு வாக்கில், அவர்கள் இரண்டு பெரிய காரியங்களைச் செய்து முடித்தனர் என்று அம்பேத்கர் தன் ஆய்வில் சில உண்மைகளை வெளிப்படுத்துவார்.
அந்த உண்மைகள் எவை என்பதை நாம் பார்ப்போம்.
Sunday, January 20, 2008
கனவு....காதல்....கொஞ்சம் கடமை! - 5
இரண்டு சமூகங்களுக்குள் மோதல்கள் வருவது இயல்புதான் என்பதை நாம் அறிவோம். அம்மோதல்கள் சில நேரங்களில் இராணுவப் படையெடுப்பாகவும், சில வேளைகளில் பண்பாட்டுப் படையெடுப்பாகவும் அமையும்.