Wednesday, February 20, 2008

கனவு....காதல்....கொஞ்சம் கடமை! - 7

7


சாதி, மதம், மொழி, எல்லாவற்றையும் மீறி, ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்படுவது, அன்றிலிருந்து இன்றுவரை இயல்பான ஒன்றே, அதனால்தான் காதலை 'உயிரியற்கை' என்றார் பாரதிதாசன்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, காதலானது வருணச் சுவர்களை இடித்துத் தகர்க்கத் தொடங்கியது. வருணக் கலப்பில் குழந்தைகள் பிறக்கத் தொடங்கினர்.

எனவே, வருணங்களுக்கிடையிலான சுவர்களை, மேலும் வலிமையாகக் கட்டிட வேண்டிய தேவை, மேல்வருணத்தினர் எனப்பட்டோருக்கு அன்று ஏற்பட்டது.

வருணக் கலப்பு, மிகக் கடுமையான குற்றமாக அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் பிறந்த குழந்தைகள் பஞ்சமர் (தலித்) என்றும், சண்டாளர் என்றும் பெயர் சூட்டப்பட்டு, வருணங்களுக்கு வெளியில், அதாவது வருணங்கள் அற்றவர்களாக நிறுத்திவைக்கப்பட்டனர். 'அவருணத்தார்' என அவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு, பாராமை, நெருங்காமை, தீண்டாமை ஆகிய மூன்று கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன.

ஒரே மாதிரியாகப் பார்க்கப்படவில்லை. பார்ப்பன, சத்திரியக் கலப்பையும், பார்ப்பனலிவைசியக் கலப்பையும், சத்திரியலிவைசியக் கலப்பையும் விட, சத்திரியலிசூத்திரக் கலப்பும், வைசியலிசூத்திரக் கலப்பும் கூடுதல் குற்றமாகக் கருதப்பட்டன. எல்லாவற்றையும்விட பார்ப்பனலிசூத்திரக் கலப்பு, பெரும் பாவமாகவே அறிவிக்கப்பட்டது. மற்றவர்கள் பஞ்சமர்கள் என்றும், பார்ப்பனப் பெண்ணுக்கும், சூத்திர ஆணுக்கும் பிறந்த மக்கள் சண்டாளர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

பஞ்சமர்கள் தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்டனர். சண்டாளர்களோ, நெருங்காமை, பாராமை போன்ற கூடுதல் கொடுமைகளுக்கும் ஆளாயினர். பஞ்சமர், சண்டாளர் அனைவரும் ஊருக்கு வெளியில், சேரிகளில்தான் வாழ வேண்டும். அவர்களைத் தொட்டாலே தீட்டு என்றனர். அவர்கள் அனைவரும், மனிதரிலும், ஏன் விலங்குகளிலும், கீழானவர்களாக நடத்தப்பட வேண்டும் என்பது இந்து மதத்தின் எழுதப்படாத சட்டங்கள் ஆயின. அதனால்தான் நாய், மாடு போன்ற விலங்குகளைக்கூடத் தொடும் மனிதர்கள், சாதியின் பெயரால், மனிதர்களைத் தொட்டால் தீட்டு என்று கருதும் இழிவான மனப்பாங்கு இன்றும் உள்ளது.

சண்டாளர்களுக்கு விதிக்கப்பட்ட நடைமுறைகளோ, மிகக் கொடுமையான தண்டனைகள். ''அவர்கள் உடைந்த மட்பாண்டங்களிலே மட்டுமே உணவு உண்ண வேண்டும். பித்தளை, இரும்பில் மட்டுமே அணிகலன்கள் அணியவேண்டும். பிணங்களுக்குப் போர்த்திய துணிகளை மட்டுமே ஆடைகளாக உடுத்திக்கொள்ள வேண்டும்.'' என்னும் காட்டுமிராண்டிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

'சண்டாளன்' என்னும் சொல்லை நாம் வேடிக்கையாக, அடப்பாவி சண்டாளா என்று இன்றும் பயன்படத்துகிறோம். ஆனால் அது ஒரு வேடிக்கையான வசைச்சொல் அன்று.

மிகக் கொடூரமான, மனிதர்களை இழிவுபடுத்தும், வருண அடுக்கைக் காப்பாற்றப் பிறந்த சொல் அது.

இத்தீண்டாமைக் கோட்பாடு, கி.பி.5ஆம் நூற்றாண்டு அளவில், பாலாத்தியன் என்னும் மன்னன் ஆட்சிக்காலத்தல், திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பதை அம்பேத்கர் தன் ஆய்வில், வலிமையான சான்றுகள் மூலம் நிறுவியுள்ளார்.

இவையெல்லாம் பழங்கதைகள். இப்போது பாராமை, நெருங்காமை எல்லாம் எங்கு உள்ளன? ஏன் பழையன குறித்து இப்போது நாம் பேச வேண்டும் என்று இளைஞர்கள் சிலர் வினாக்களைத் தொடுக்கின்றனர்.

இன்றைக்கும், அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய யுகத்திலும், தீண்டாமை உள்ளதா, இல்லையா? ஒவ்வொரு கிராமத்திற்கும் வெளியில் ஒரு சேரி உள்ளதா, இல்லையா? தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான சிற்றூர்களில் 'இரட்டைக் குவளைகள்' நடைமுறையில் காணப்படுகின்றனவா, இல்லையா?

இவையெல்லாம் மனிதகுல வரலாற்றின் அநாகரிகச் சின்னங்கள் என்னும் கோபமும், கொந்தளிப்பும் நமக்குள் ஏன் ஏற்படவில்லை?

மாநகரங்களில், கணிணித் தொழில்நுட்பக் கண்ணாடி மாளிகையில் சாதியும், தீண்டாமையும் எங்கே உள்ளது என்று கேட்கலாம். அங்கும் கூட, மனித மனங்களில் சாதி அழுக்கு ஒட்டிக் கொண்டிருக்கிறதா, இல்லையா என்பதை மனச்சாட்சி உள்ளவர்கள் உரத்துச் சொல்லுங்கள். திருமணம் என்று வரும்போது, குலம், கோத்திரம், சாதி, உட்சாதி அனைத்தும் பார்க்கப்படுகிறது என்பதுதானே நடைமுறையாக உள்ளது. பிறகு எப்படி, மாநகரங்களில் சாதி ஒழிந்துவிட்டதாகக் கருத முடியும்?

வருணத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த நாம், திடீரெனச் சாதிக்குள் வந்துவிட்டதாக எண்ணத் தேவையில்லை. வருணத்திலிருந்தே சாதிகளும், பிறகு உட்சாதிகளும் தோன்றின என்பது சமூக வரலாறு. அதனால்தான் இந்து மதம் என்பது, வருண சாதி அமைப்பைத் தன் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

இந்த இடத்திலும் சில இளைஞர்கள் என்னோடு ஒரு மோதலுக்குத் தயாராவார்கள் என்பதை நான் அறிவேன். ஏன் எப்போது பார்த்தாலும் இந்து மதத்தையே சாடுகின்றீர்கள், பிற மதங்களில் பிரிவினையோ, குறைபாடுகளோ இல்லையா என்பது நெடுநாளாகத் தொடுக்கப்பட்டு வரும் வினா. 'இந்து மத துவேஷிகள்' என்பது எம் போன்றோருக்கு இலவசமாக வழங்கப்பட்டிருக்கும் பட்டம்.

எல்லா மதங்களிலும் பிரிவுகள் உள்ளன என்பதை யார்தான் மறுக்க முடியும்? கத்தோலிக்கம், பிராட்டஸ்டண்ட் என்று கிறித்தவ மதமும், சன்னி, ஷியா என்று இஸ்லாமிய மதமும், மஹாயானம், ஹீனயானம் என்று பௌத்த மதமும் பிளவுப்பட்டு நிற்பது உண்மைதான். வேறு பல மதங்களிலும் இவைபோன்றும், இன்னும் பலவாறாகவும் பிரிவுகள் இருக்கவே செய்கின்றன.

ஆனால் இவற்றிற்கும், இந்து மதத்தில் உள்ள சாதிப் பிரிவுகளுக்குமிடையே உள்ள வேறுபாடுகள் முற்றிலும் வேறானவை. மற்ற மதங்களுக்கிடையே உள்ள பிரிவுகளுக்குள் பகையே கூட உள்ளது. ஆனால் அங்கு ஏற்றத்தாழ்வோ, தீண்டாமையோ கற்பிக்கப்படவில்லை என்பதே முதன்மையானது. அந்தப் பிரிவுகளுக்குக் காரணம் கோட்பாடுகளும், வழிபாட்டு வேறுபாடுகளும், அதிகாரப் போட்டிகளும், வேறுபட்ட நம்பிக்கைகளுமே ஆகும். பிறப்போ, வருணமோ காரணங்கள் இல்லை.

அந்தப் பிரிவுகள் எத்தகையன எனில், இந்து மதத்திற்குள் உள்ள சைவ, வைணவ, சாக்த, காணபத்யப் பிரிவுகளைப் போன்றவை. அவை போன்ற பிரிவுகள் இந்து மதத்தில் இன்னும் எண்ணற்றவையாக உள்ளன. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்களைக் கூட, இந்து மதத்தில் உட்பிரிவுகளாகவே இந்திய அரசமைப்புச் சட்டம் இன்றும் கூறுகிறது. கிறித்தவம், இஸ்லாமியம், பார்சி ஆகிய மூன்று மதங்களைத் தவிர, மற்றவை அனைத்தும் இந்து மதத்தின் உட்கூறுகள் என்றே சட்டம் சொல்கிறது. அவர்களுக்கிடையே ஏற்படும் சட்டச் சிக்கல்கள் அனைத்தும் 'இந்துச் சட்டத்தின்' கீழ்தான், நீதிமன்றங்களில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

ஆதலால், இந்து மதம் உள்ளிட்ட பல்வேறு மதங்களில் காணப்படும் உட்பிரிவுகளையும், வருண லி சாதி அடுக்கையும் நாம் ஒப்பிடுவது முறையாகாது. இவை மனித நேயமற்ற, மனித நாகரீகத்திற்கும், அறிவியல் வளர்ச்சிக்கும் புறம்பாகக் கற்பிக்கப்பட்டுள்ள இழிவு என்பதை இளைய தலைமுறையினர் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இன்றைய நிலையிலும் வருணப் பிரிவை ஆதரிக்கின்றவர்கள் இருக்கவே செய்கின்றனர். காந்தியடிகளே, தீண்டாமையை மிகக் கடுமையாக எதிர்த்த போதிலும், வருணங்களை ஏற்கவே செய்தார். வருணம் என்பதைத் தொழில் பிரிவாகக் கருதியதே அதற்கான காரணம். உலகில் அனைவரும் ஒரே தொழிலைச் செய்து கொண்டிருக்க முடியாது. பலரும் பல்வேறு தொழில்கள் புரிவதன் முலமே, உலக இயக்கம் நடைபெறும். ஆகவே வருணங்கள் இருப்பதில் பிழை இல்லை என்று காந்தியடிகள் கருதினார்.

மனிதர்கள் மாறுபட்ட தொழில்களில் ஈடுபடுவதைச் சரியானது என்றே நாமும் கருதுகின்றோம். எனினும், வருணம் என்பது தொழில் பிரிவினையை மட்டும் சுட்டி நிற்கவில்லை. அத்தொழில்களுள் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கின்றது. மேலும் அப்பிரிவைப் பிறப்போடு தொடர்புபடுத்துகின்றது.

யாரெல்லாம் போர் புரிகின்றனரோ, அவர்கள் சத்திரியர் என்றும், யாரெல்லாம் வணிகம் செய்கின்றனரோ அவர்கள் வைசியர் என்றும் கூறப்படவில்லை. போர் புரிந்தாலும, இல்லையென்றாலும், வீரம் மிக்கவனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அரச குடும்பத்தில் பிறக்கும் அனைவரும் சத்திரியர்களே. எவ்வளவுதான் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினாலும், உழைக்கும் மக்கள் வீடுகளில் பிறக்கும் அனைவரும் சூத்திரர்களே. அதாவது, ஒருவனின் வருணம், அவனது குணநலன்களைக் கொண்டோ, தகுதி, திறமைகளைக் கொண்டோ தீர்மானிக்கப்படுவதில்லை. அவனது பிறப்பைக் கொண்டே முடிவு செய்யப்படுகின்றது.

வருண அமைப்பு, தமிழகத்துள் புகத் தொடங்கிய அந்த நாட்களில், அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், சில நெகிழ்வுகள் காணப்படுகின்றன. ''வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின்'', அவனும் மேற்பாலாகக் கருதப்படுவான் என்கிறது ஒரு புறநானூற்றுப் பாடல். அன்றைக்கே, வேற்றுமைகள் நிறைந்த நான்கு வருணங்கள் இருந்திருக்கின்றன என்பதும், அவற்றுள் மேல், கீழ் என்னும் வேறுபாடுகளும் இருந்திருக்கின்றன என்பதும் தெளிவாகின்றது. இருந்தபோதிலும், கீழ்ப்பால் ஒருவனும் கற்க முடிந்துள்ளது என்பதோடு, அந்தக் கல்வி அவனை மேல்நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது என்பதே அப்பாடல் மூலம் நாம் அறிந்திடும் செய்தி. பிறப்பின் அடிப்படையில் அல்லாமல், தகுதியைக் கொண்டே, மேல், கீழ் என்பன முடிவாகியிருக்கின்றன என்பது உறுதியாகின்றது.

பிறப்பினால் உயர்வு, தாழ்வு கற்பிக்கப்படுவதை எதிர்க்கும் முதல் இலக்கியமாகத் திருக்குறள் நமக்குக் கிடைத்துள்ளது. ''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்கிறது குறள். அது மட்டுமல்லாமல், அக்குறளின் அடுத்த வரி, செய்தொழிலில் உள்ள வேற்றுமையால் சிறப்பு வந்து சேர்ந்துவிடாது என்கிறது. 'வருணதர்மத்திற்கு' எதிரான முதல் குரலாக குறள் அன்று ஒலித்துள்ளது.

இத்தகைய எதிர்ப்புக் குரல்கள் இன்னும் பலவாக அன்று இருந்திருக்கக்கூடும். ஆனால் அந்நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லை. எத்தனையோ நூல்கள் அழிந்துபோய் உள்ளன. அழிக்கப்பட்டும் உள்ளன. அப்படி சுவை ஆகியிருக்கக்கூடும்.

எவ்வாறாயினும் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டிய தேவையும், வருணத்தை நிலைநாட்ட வேண்டிய தன்னவமும் எழுந்த வேளையில் வருணக் கலப்பைத் தடுப்பதற்கு வெறும் தண்டனைகள் மட்டும் போதுமானவையாக இல்லை. கடவுளின் பெயரால் வருணங்களையும், அவற்றுக்கிடையே எழுப்பப்பட்ட ஏற்றத்தாழ்வுகளையும் நியாயப்படுத்துவதே சிறந்த வழி என்று கருதியிருக்க வாய்ப்புண்டு.

அந்தக் கருத்தின் இலக்கிய வடிவமே, ''பகவத் கீதை'' என்று சொன்னால், சிலர் அதிர்ச்சியடையக் கூடும். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அதிரிச்சியடையக் கூடாது.

No comments:

Text Widget

Text Widget