Monday, March 3, 2008

கனவு....காதல்....கொஞ்சம் கடமை! - 8

8

இதுதான் 'ராம ராஜ்யம்':


பகவத் கீதையை மகாபாரதத்தின் ஒரு பகுதி என்றே நம்மில் பலர் நம்புகின்றோம்.

ஆனால் பகவத் கீதையின் உள்ளடக்கம், மொழி நடை ஆகியனவற்றை ஆராய்ச்சி செய்த வரலாற்றாசிரியர்கள் அக்கருத்தை மறுக்கின்றனர்.

மகாபாரதம் ஒரே நாளில் அல்லது ஒரே காலத்தில் உருவான காப்பியம் அன்று. பல நூறு கிளைக் கதைகளாக மக்களால் அறியப்பட்டு, மெல்ல மெல்ல ஒன்றான பெருங்காப்பியமே அது. அதன் இறுதி வடிவம் அல்லது இன்றைய வடிவம் ஏற்படுவதற்குப் பல்லாண்டுகள் ஆகியிருக்கக்கூடும்.

பகவத்கீதையைப் பொறுத்தமட்டில், கி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டில், இடைச் செருகலாக மகாபாரதத்துள் இணைக்கப்பட்டிருக்கலாம் என்பதே ஆய்வாளர் கருத்து. பகவத் கீதை, கிருஷ்ணனை எல்லாம் வல்ல கடவுளாகக் காட்டுகிறது. மகாபாரதத்திலோ, அவர் ஒரு பாத்திரமாக மட்டுமே படைக்கப்பட்டுள்ளார். ஒரு விருந்தில் கிருஷ்ணருக்குத் தருமர் முன்னுரிமை கொடுக்காததைக் கூட, சிசுபாலன் மிகக் கடுமையாகச் சாடுவதை மகாபாரதத்தில் காண முடிகிறது. சிசுபாலன் போன்ற துணைப் பாத்திரங்களால் கூட விமர்சிக்கப்படுகின்ற சாதாரணப் பாத்திரப் படைப்பாகவே நாம் கிருஷ்ணரைப் பார்க்கின்றோம்.

மேலும், சங்க இலக்கியம், திருக்குறள், சிலம்பு முதலான பழந்தமிழ் இலக்கியங்கள் எவற்றிலும் பகவத் கீதை பற்றிய சிறு குறிப்பும் காணப்படவில்லை. அன்று நிலவிய சமயங்கள், சமயக் கோட்பாடுகள் ஆகியன குறித்து விவாதிக்கும் மணிமேகலை கூட, பகவத்கீதை பற்றி எதுவும் பேசவில்லை. எனவே அது ஒரு பிற்காலப் படைப்பே என்பது தெளிவாகின்றது.

பிற்காலத்தில் அப்படி ஓர் இலக்கியம் ஏன் தேவைப்பட்டது என்பதற்கான காரணங்களும் தெளிவாக உள்ளன. வருணக் கலப்பில் பிறந்த குழந்தைகள் பஞ்சமர்களாகவும், சண்டாளர்களாகவும் ஆக்கப்பட்டு, சமூக விலக்கலுக்கு ஆளாக்கப்பட்டதைப் பார்த்தோம்.

திருமணங்களால் மட்டுமின்றி தம் வருணங்களுக்கு உரிய தொழில்களைக் கைவிட்டு, வேறு வருணத்தார்க்கு உரிய தருமங்களைக் மேற்கொள்வதாலும் வருணங்கள் உடைபடுகின்றன. அதனைத் தடுப்பதற்கு ஒரு வலிமையான ஆயுதம் தேவைப்பட்டது. அதுவே பகவத் கீதை.

பகவத் கீதையில் பல்வேறு கருத்துகளும், தத்துவங்களும் கூறப்பட்டுள்ளன என்று கூறுவர். ஆனால் அவை அனைத்துக்கும் மைய இழையாக, சாரமாகக் கூறப்பட்டுள்ள செய்தி, ''சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்'' என்பதே ஆகும். அதாவது, 'சதுர் (நான்கு) வருணங்களும், என் படைப்பே (சிருஷ்டி)' என்று கிருஷ்ணர் கூறுவதாக அமைக்கப்பட்டுள்ள வரியே கீதையின் சாரம். இந்நிலை, கீதையில் எவ்வாறு படிப்படியாக நிறுவப்பட்டுள்ளது என்பதை நாம் அறிய வேண்டும்.

ஏழாவது இயல், 16ஆம் பத்தியில், கிருஷ்ணர் தன் பக்தர்களை நான்கு வகையாகப் பிரிக்கின்றார். அங்குதான் நால்வருணக் கோட்பாடு உறுதி செய்யப்படுகின்றது. ஒவ்வொரு வகையினருக்கும் ஒவ்வொரு விதமான தருமம் அறிவுறுத்தப்படுகின்றது.

எனினும், 9ஆவது இயலில், ''என் வெறுப்புக்கு உரியவர் என்றோ, விருப்பிற்கு உரியவர் என்றோ எவரும் இல்லை''('None is hateful to me, none dear') என்று கிருஷ்ணர் கூறும்போது, ஒரு விதமான 'சமத்துவம்' தென்படுகின்றது. ஆனால், 12-வது இயலிலேயே, 'அர்ஜீனன் என் மிகுந்த விருப்பத்திற்கு உரியவன்' என்று அவர் கூறுவது சுயமுரணாக உள்ளது.

பின்பு, தம் வருண தர்மத்தைச் செய்யாதவர்களைத் தாம் ஏற்பதில்லை என்கிறார். அது மட்டுமல்லாமல், வருண ஏற்பாட்டை ஏற்காதவர்கள் முக்தி (நஹப்ஸ்ஹற்ண்ர்ய்) அடைய முடியாது என்றும் கூறுகின்றார்.

''ஒரு சூத்திரன், எவ்வளவு சிறந்த பக்திமானாக இருந்தாலும், அவன் தனக்குரிய தருமத்தை (அதாவது மற்ற வருணத்தார் மூவருக்கும் ஏவல் தொழில் செய்வதை) முறையாகச் செய்யவில்லையெனில், அவனுக்கு ஒரு நாளும் முக்தி கிடையாது'' என்கிறார் கிருஷ்ணர்.

எனவே பகவத்கீதை, வருண தருமத்திற்கு ஏற்ப வாழ்வதையே சிறந்த பக்தி மார்க்கமாகக் கூறுகின்றது. கடவுளை வணங்கு, கடவுளுக்குத் தொண்டு செய் என்பதற்குப் பதிலாக, மேல் வருணத்தாரை வணங்கு, அவர்களுக்குத் தொண்டு செய் என்று கீதை வலியுறுத்துகின்றது.

இந்தக் காரணத்தினால்தான், ''பகவத் கீதை, இந்துக்களின் புனித நூல்'' என்று 'மேல் வருணத்தார்' திரும்பத் திரும்பக் கூறுகின்றனர். இந்துக்கள் அனைவருக்கும் கிருஷ்ணன் மட்டும்தான் கடவுளா? சிவன், முருகன் போன்றவர்கள் கடவுளர்கள் இல்லையா? பகவத் கீதை மட்டும்தான் புனித நூலா? திருமுருகாற்றுப்படை புனித நூல் இல்லையா?

எனவே இங்கு முன் நிறுத்தப்படுவது கடவுள் அன்று, அவர் பெயரால், அவரால் படைக்கப்பட்டதாகக் கூறப்படும் நான்கு வருணங்களும், அவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள தருமங்களுமே என்பதை உணரலாம்.

வருண தருமத்தை யாரும் மறுக்கக் கூடாது என்பதும் கீதையில் முன்நிபந்தனையாகக் கூறப்பட்டுள்ளது. மூன்றாவது இயலில் உள்ள 26ஆவது பாடல், ''இங்கு கூறப்படும் கருத்துகள் மீதான எந்த சந்தேகத்தையும், அப்பாவி மக்களிடம், புத்திசாலிகள் ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது'' என்று ஆணையிடுகின்றது.

இராமாயணத்திலும் வருண தருமத்தைப் பாதுகாக்கக் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கம்பர், யுத்தகாண்டம் வரை மட்டுமே இராமாயணத்தை எழுதியுள்ளார். இராமர் அரசராகப் பதவியேற்கும் ('பட்டாபிஷேகம்') காட்சியோடு, கம்ப இராமாயணம் நிறைவடைகின்றது. எனவே 'ராமராஜ்யம்' எப்படியிருந்தது என்பதைக் கம்பர் மூலம் நாம் அறிய முடியாது. அதனை அறிந்துகொள்ள, மூல நூலான வால்மீகி ராமாயணத்திற்கு நாம் செல்ல வேண்டும்.

யுத்தகாண்டத்திற்கு அடுத்ததாக வால்மீகி படைத்துள்ள காண்டம் உத்தரகாண்டம். அக்காண்டத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஒருநாள் அரசர் இராமர் அரசவையில் அமர்ந்திருக்கும்போது, பார்ப்பனச் சேரியைச் சேர்ந்த சிலர் அங்கு வருகின்றனர். தங்கள் குழந்தை ஒன்று திடீரென இறந்து விட்டதாகவும், சம்பூகன் என்னும் ஒரு சூத்திரன் அருகிலுள்ள வனம் ஒன்றில் தவம் மேற்கொண்டிருப்பதே அதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்றும் கூறுகின்றனர்.

அதைக்கேட்ட இராமர் மிகுந்த சினம் கொள்கின்றார். 'சூத்திரன் ஒருவன், பிராமணர்களுக்கு உரிய தருமமான தவத்தை மேற்கொள்வதா? என் ஆட்சியில் இப்படி ஓர் அவச் செயலா' எனச் சொல்லி, 'வாருங்கள், அவன் தவம் செய்யும் காட்சியைக் காண நானே நேரில் வருகிறேன்' என்று புறப்படுகின்றார்.

அவர்கள் அந்த இடத்திற்கு இராமரை அழைத்துச் செல்கின்றனர். அங்கே சம்பூகன் தவம் செய்யும் காட்சியை அவரே நேரடியாகக் காண்கின்றார்.

சம்பூகனைப் பார்த்து, ''தவத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவன் வாய்மை தவறக் கூடாது. சொல், நீ எந்த வருணத்தைச் சேர்ந்தவன்'' என்று கேட்க, தான் ஒரு சூத்திரன் என்று விடை பகர்கின்றான்.

உடனே தன் வாளை உருவிய இராமர், அந்த இடத்திலேயே அவன் தலையைக் கொய்து விடுகிறார். சம்பூகளைக் கொன்று, வருணாசிரமதர்மத்தைக் காப்பாற்றி விடுகிறார்.

கவனத்தில் வையுங்கள் - இதுதான் 'ராம ராஜ்யம்'.

மானசீனமாகத் துரோணரை ஆசிரியராகக் கொண்டு, வில்வித்தை பயின்ற ஏகலைவனின் கட்டைவிரல் வாங்கப்பட்டதும், வருணாசிரமத்தைக் காப்பதற்குத்தான்!

ஒரு பக்கம், வருணங்களை - அறிவது மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளை - நான்தான் படைத்தேன் என்கிறார் கிருஷ்ணர்.

இன்னொரு பக்கம், வருணத்தைக் காப்பதற்காகச் சம்பூகன் தலையை வெட்டுகின்றார் இராமர்.

இவ்வாறு கடவுளால் உருவாக்கப்பட்டு, கடவுளால் காப்பாற்றப்படுவதுதான் வரணதர்மம் என்று அழுத்தமாக் கூறிவிட்ட பிறகு, கடவுளின் படைப்பை, கடவுளின் ஆணையைச் சாதாரண மனிதனால் எப்படி மீற முடியும்?

மனிதர்கள் அடங்கிப் போனார்கள். விரும்பியோ, விரும்பாமலோ வருணத்தை, அதற்கான தருமத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

தொடக்க காலத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருணம் தீர்மானிக்கப்பட்டது. பிறகு, பிறவி முழுவதும் ஒரே வருணம்தான் என்றானது. காலப்போக்கில், தலைமுறை தலைமுறைக்கும் வருணம் மாறாதது என்று ஆக்கப்பட்டது.

வருணம் இறுகிச் சாதியாக ஆனது. சாதிகளுக்குள் பல பிரிவுகள் ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான உட்சாதிகள் தோன்றின. உட்சாதிகளுக்குள் கூட கொள்வினை, கொடுப்பினை மறுக்கப்பட்டு, 'அகமணம்' உறுதி செய்யப்பட்டது.

சாதிக்கு ஒரு நீதியும், சாதிக்கு ஒரு தொழிலும் சமூகச் சட்டங்களாயின. சாதிகளோடு தொழில்கள் பிணைக்கப்பட்டதால், சாதிகளுக்குக் கற்பிக்கப்பட்ட அனைத்து ஏற்றத் தாழ்வுகளும், தொழில்களுக்கும் பொருத்தப்பட்டன. இந்தத் தொழில் உயர்ந்தது, இந்தத் தொழில் தாழ்ந்தது என்னும் மனப்பான்மை எங்கும் பரவியது.

'நம்ம சாதியல பொறந்திட்டு, இந்தத் தொழில் செய்யலாமா நீ?' என்பன போன்ற பேச்சுகள் இன்றும் நம் காதுகளில் விழக் கேட்கின்றோம். எனவே, வேலையில்லாமல் வேண்டுமானாலும் இருக்கலாம், 'இழிசாதியினருக்குரிய இழி தொழிலைச் செய்யக் கூடாது' என்னும் இழிவான எண்ணம் இளைஞர்களிடையே தோன்றியது.

இப்போது ஒரு தொழிலில், பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனரே... அரசுப் பணிகளில் ஆயிரம் சாதியினர் இல்லையா!... ஆசிரியர்கள் அனைவரும் ஒரே சாதியா என்றெல்லாம் கேட்கலாம்.

சாதிக்கும், தொழிலுக்குமான உறவு இப்போது பெரிதும் உடைபட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால் இன்றும், மேலும், கீழும் சாதிலிதொழில் உறவு இருக்கத்தான் செய்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

கோயில்களில் அர்ச்சகர்களாக இருப்பவர்கள் இன்று வரை ஒரே சாதியினர்தானே? (வருங்காலத்தில் நிலைமை மாறலாம்). அதேபோல, பிணம் எரிப்பவர்களும், செருப்புத் தைப்பவர்களும், சாக்கடை சுத்தம் செய்பவர்களும் ஒரே ஒரு குறிப்பிட்ட சாதியினர்தானே?

இடைநிலைகளில் - அரசுப் பணி, ஆசிரியப் பணி போன்றவற்றில் - ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கூட ஒரே இரவில் ஏற்பட்டுவிடவில்லை. அதற்காக இங்கே ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளன.

அவற்றுள் ஒன்றிரண்டையேனும் நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

6 comments:

சலாம் ஹே... ராம் said...

நன்றி ஐயா ,

இன்றைய இளைஞர்கள் படிக்க வேண்டிய பகுதி இது தான் . இது போன்ற கட்டுரைகள்
பாட திட்டத்தில் சேர்க்க பட வேண்டும் .

வரலாறு.காம் said...

//ஒரு விருந்தில் கிருஷ்ணருக்குத் தருமர் முன்னுரிமை கொடுக்காததைக் கூட, சிசுபாலன் மிகக் கடுமையாகச் சாடுவதை மகாபாரதத்தில் காண முடிகிறது.//

முன்னுரிமை கொடுத்ததை என்று வரவேண்டும் என்று நினைக்கிறேன்.

அருமையான தொடர் எளிய நடையில்.

நன்றி
கமலக்கண்ணன்
www.varalaaru.com

சிபி அப்பா said...

எந்த நல்ல மனிதனும் தான் பெற்ற பிள்ளைகளில் வித்தியாசம் பார்ப்பதில்லை. மாகாத்மா எனப்படும் இறைவனும் அப்படித்தான் இருப்பார் எனவே நாம் கானும் கடவுளும் மதமும் மனிதனின் படைப்பு தான்.

shankaran E R said...

Hello Su.Ve,

Your article seems more analytic but it's not. Please provide evidences for all your comments of historic elements like Gita, Ramayana and Mahabharata.I'm eagerly waiting for ur reply

சக்திவேல் said...

மிக்க நன்றி ஐய்யா,
உரிமை மறுக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் தங்கள் உரிமைகளை அறிந்து பெற்றுக்கொள்ள மேற்கொன்ட போராட்டங்களைப்பற்றியும் அதற்காக தன்நலம் பாராமல் செயலாற்றியவர்களைபற்றியும் உங்களைப்போன்ற தமிழர்கள் உரிமைக்காவலர்களின் வாயிலாக அறிவது குறித்து மகிழ்சி. உங்கள் முயற்சிகள் காலத்தால் போற்றக்கூடியவை. எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். தொடருங்கள்

பார்வைகள் said...

அன்புள்ள ஐயா சுப.வீ. அவர்களுக்கு வணக்கம்.
எளிமையும் இனிமையும் கலந்த நல்ல தரமான ஆய்வு. தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியமைக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.
தமிழன்புடன்,
முனைவர் தி.நெடுஞ்செழியன்
ஆசிரியர், www.tamilthinai.com

Text Widget

Text Widget