Tuesday, February 12, 2008

கனவு....காதல்....கொஞ்சம் கடமை! - 6

6


உலகில் நம் ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதமான அடையாளங்கள் உள்ளன.

'நீங்கள் யார்?' என்னும் ஒரு கேள்விக்கு எத்தனையோ விடைகள் சொல்லப்படலாம்.

இந்தியர், அமெரிக்கர், சீனர் என்றும், தமிழர், தெலுங்கர், வங்காளி என்றும், இந்து, முஸ்லீம், கிருத்துவர் என்றும், ஆசிரியர், தொழிலாளி, எழுத்தாளர் என்றும், பள்ளர், முதலியார், நாடார் என்றும் இன்னும் பலவாறாகவும் நாம் நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். நாடு, மொழி, மதம், தொழில், சாதி என்னும் அடிப்படையில் மேற்காணும் அடையாளங்கள் கூறப்படுகின்றன. உறவுகளின் அடிப்படையில் அப்பா, அண்ணி, அத்தை என்றும் விடை கூறலாம்.

எல்லாம் அடையாளங்கள்தான். ஆனால் இவை அனைத்திலிருந்தும் 'சாதிய அடையாளம்' வேறுபட்டிருப்பதை, நுட்பமாகப் பார்த்தால் அறிய முடியும். எல்லைக் கோடுகளின் அடிப்படையில் நாடும், மொழி அடிப்படையில் தேசிய இனமும், நம்பிக்கைகளின் அடிப்படையில் மதமும், பணி அடிப்படையில் தொழிலும் தீர்மானிக்கப்படுகின்றன. சாதியோ, பிறப்பின் அடிப்படையில் முடிவாகின்றது.

நாடு, மொழி, மதம் ஆகியன அடுத்தடுத்து நிற்கும் வரிசை (ஐர்ழ்ண்க்ஷ்ர்ய்ற்ஹப் ப்ண்ய்ங்). சாதி அமைப்போ, ஒன்றின் கீழ் இன்னொன்று என வைக்கப்பட்டிருக்கும் அடுக்கு (யங்ழ்ற்ண்ஸ்ரீஹப் கண்ய்ங்).

ஒவ்வொருவரும் தங்களின் நாடு, மொழி ஆகியனவற்றை உயர்வாகக் கருதியும், பேசியும் வருவது இயல்பே என்றாலும், இந்த மொழி உயர்ந்தது, இந்த மொழி தாழ்ந்தது என்று எங்கும் எப்போதும் எந்த முடிவும் இல்லை. தொழில் அமைப்பும் கூட அவ்வாறானதே.

ஆனால், சாதி மட்டுமே மிகத் தெளிவாக மேல் ஜாதி, கீழ் ஜாதி எனப் பிரிக்கப்பட்டுள்ளது. பிறப்பே அடிப்படை, ஏற்றத்தாழ்வே உள்ளடக்கம் என்னும்போக்கில் நிலை பெற்றிருப்பதும், இந்த இரண்டினால் மட்டுமே உயிர்வாழ்வதும் சாதியாகும்.

சாதி என்னும் இந்த அமைப்பு, இந்தியாவில் மட்டுமே உள்ளது என்பது இன்னொரு செய்தி. சிறீலங்காவில், பாகிஸ்தானில், பர்மாவில், பங்களாதேசத்தில் சாதி உள்ளதே என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான் அந்த நாடுகளிலும் சாதியப் பாகுபாடுகள் இருக்கவே செய்கின்றன. காரணம், அந்நாடுகளும் ஒரு காலத்தில் இந்தியாவோடு இணைந்திருந்தன என்பதை மறந்துவிடக் கூடாது.

எனவே, இந்தியாவிலும், இந்தியாவாக இருந்த நாடுகளிலும் மட்டுமே சாதி உள்ளது. வேறு எங்கும் இல்லை. மேலை நாடுகளில் உள்ள நிறவெறி சாதியோடு ஒத்தது என்னும் கருத்தையும் நாம் புறந்தள்ள முடியாது. இரண்டும் ஒழிக்கப்பட வேண்டியவையே.

சாதியின் தாய் வருணம் என்று கூறலாம். பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால்வருணப் பிரிவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பார்க்க முடிகின்றது.

இந்திய வரலாற்றில் மௌரியர் ஆட்சி முடிந்து, தங்கர்களின் ஆட்சி தொடங்கும்போது, புஷ்யமித்திர சுங்கனின் ஆட்சியில், மனு என்னும் புனைப் பெயரைக் கொண்ட சுமதி பார்கவா என்பவரால் எழுதப்பட்ட நூலே 'மனுநீதி' என்பதாகும். இந்த மனுநீதிதான், ஒவ்வொரு வருணத்திற்கும் ஒவ்வொரு நீதியைச் சொல்கிறது.

ஒரு குறிப்பிட்ட குற்றத்தைச் சூத்திரன் செய்திருந்தால், அவனுக்குச் 'சிரச்சேத'த் தண்டனையை வழங்கும் மனுநீதி, அதே குற்றத்தை ஒரு பார்ப்பனன் செய்தால் அவன் தலையை மொட்டையடித்தால் போதும் என்கிறது.

இவ்வளவு ஒருதலைப்பட்சமாக நீதி வழங்கப்பட்டிருக்குமா என்ற ஐயம் இளைஞர்களுக்கு வரக்கூடும். அவ்வாறு சந்தேகிப்பது மகிழ்ச்சிக்குரியதே. ஆனால், சந்தேகிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், அவர்கள் உடனே அதைச் சரிபார்க்க வேண்டும் என்பதே நம் விருப்பம். முன்பு வடமொழியில் மட்டும் இருந்த மனுநீதி, இப்போது ஆங்கிலம், தமிழ் எனப் பல மொழிகளிலும் பெயர்க்கப்பட்டு, நூல் வடிவில் வெளிவந்துவிட்டது. சரிபார்த்துக் கொள்வதில் எந்தச் சிரமமுமில்லை.

ஏன் ஒரு வருணத்துக்கு ஒரு நீதி வழங்கப்பட்டது எனில், ஒவ்வொரு வருணமும் ஒன்றின் கீழ் இன்னொன்றாக அடுக்கப்பட்டிருப்பதே காரணம். அப்படி அடுக்கியவர்கள் யார் என்ற கேள்வி அடுத்து எழுவதும் நியாயமே!

இந்து மதத்தின் அடிப்படை ஸ்ருதியும், ஸ்மிருதியும் என்று கூறுவர், ஸ்ருதி என்பது வேதங்கள், உபநிடதங்கள், ஆரண்யங்கள், பிராமணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஸ்மிருதி என்பது புராண, இதிகாசங்களின் தொகுப்பு.

இவை அனைத்துள்ளும் வேதங்களே தொன்மையானவை.

அவை ரிக், யஜீர், சாம, அதர்வனம் என நான்கு வகைப்படும். இவற்றுள் முதலாவது வேதமான ரிக் வேதத்தின் 10ஆவது அத்தியாயமான 'புருஷசூக்தம்' என்னும் இயலில்தான், நால்வருணப் பிரிவு பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. பிரம்மத்தின் தலையிலிருந்து தோன்றியவர்கள் பிராம்மணர்கள் என்றும், தோளில் பிறந்தவர்கள் சத்திரியர்கள் என்றும், இடையில் தோன்றியவர்கள் வைசியர்கள் என்றும், பாதத்தில் பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும் இந்துமத வேதம் சொல்கிறது.

தலையில் பிறந்தவர்கள், அறிவு தொடர்பான கல்வி கற்க உரியவர்கள் என்பதும், தோளில் பிறந்தவர்கள் வீரம் தொடர்பான போருக்கு உரியவர்கள் என்பதும், இடையில் பிறந்தவர்கள் செல்வம் தொடர்பான வணிகத்திற்கு உரியவர்கள் என்பதும், கால்களில் பிறந்தவர்கள் உழைப்பு தொடர்பான ஏவல் வேலைகளுக்கு உரியவர்கள் என்பதும், அதே புருஷ சூக்தம் தரும் செய்திகள்.

இவ்வாறாகத்தான், பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன.

எனினும் இந்த ஏற்றத்தாழ்வுகளை மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை. தான் தாழ்ந்தவன் என்பதைச் சுயமரியாதை உள்ள யார் ஏற்றுக்கொள்வார்கள்?

எனவே கட்டுப்பாடுகளை மீறி வருணக் கலப்புகள் நடந்தன. வெவ்வேறு வருணங்களைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் உடலுறவு கொண்டு, பிள்ளைகளைப் பெற்றெடுத்தபோது, அவர்களை எந்த வருணத்தில் சேர்ப்பதென்னும் பெரிய கேள்வி எழுந்தது.

அது மட்டுமல்லாமல், ஒரு வரணத்திற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள தொழிலை (அதாவது, தருமத்தை), இன்னொரு வருணத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கொள்ளத் தொடங்கினர்.

அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளதுதான் விசுவாமித்திரன் கதையும், பரசுராமன் கதையும்.

விசுவாமித்திரனின் இயற்பெயர் கௌசிகன். அவன் ஒரு மன்னன். எல்லா அதிகாரங்களும் தனக்கே உரியவை என்று கருதியவன். அதன்விளைவாக, அம்மன்னனுக்கும், அந்நாட்டில் இருந்த வசிஷ்டர் என்னும் பார்ப்பன ரிஷிக்குமிடையே ஒரு மோதல் உருவாயிற்று. வசிஷ்டரிடமிருந்த 'காமதேனு' என்னும் பசுவும் தன் ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்டது என்று, கௌசிக மன்னன் கூறியபோது, வசிஷ்டர் வெகுண்டெழுந்தார். இருவருக்குமிடையே தோன்றிய பகையில், சத்ரியனான கௌசிகனின் தோள் வலிமையை பார்ப்பனனான வசிஷ்டரின் தவ வலிமை வென்று விட்டது. எனவே, கௌசிக மன்னனும், தவம் செய்து பெரு வலிமையைப் பெற எண்ணினான். கடுந்தவமும் செய்தான். இறுதியில் 'வசிஷ்டரின் வாயால் ராஜரிஷி' என்னும் பெயரையும் பெற்றான். அப்போதும் கூட, பிரம்மரிஷி பட்டம் வழங்கப்படாமல், ராஜரிஷி என்னும் ஆறுதல் பரிசே வழங்கப்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

எவ்வாறோ, சத்திரிய வருணத்திலே பிறந்த கௌசிகன், பார்ப்பன வருணத்திற்குரிய தர்மமான தவம் புரிந்து, விசுவாமித்திரன் ஆனான். வருண தர்மம் இங்கு தவறிப்போனது.

நேர்மாறாக, பார்ப்பன வருணத்திலே பிறந்த பரசுராமன், ஆயுதம் ஏந்தி மன்னர்களோடு போரிட்டு வென்றான். இங்கும் வருண தருமம் பிழைத்துப் போயிற்று.

எனவே, வருணம் மாறி ஏற்பட்ட ஆண், பெண் உறவினாலும், வருணம் மாறி மேற்கொண்ட தொழிலாலும், வருணாசிரம தர்மம் ஆட்டம் கண்டனது. மேல், கீழ் என்னும் அடுக்குகள் சிதையத் தொடங்கின.

இதனால், வருண அடுக்கின், மேல் தட்டில் இருந்தவர்களின் நிலை கவலைக்குள்ளானது. தங்களின் வசதியான மேல் நிலையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற தவிப்பு அவர்களிடம் மேலோங்கியது.

அதன் விளைவாகவே, கி.பி.5ஆம் நூற்றாண்டு வாக்கில், அவர்கள் இரண்டு பெரிய காரியங்களைச் செய்து முடித்தனர் என்று அம்பேத்கர் தன் ஆய்வில் சில உண்மைகளை வெளிப்படுத்துவார்.

அந்த உண்மைகள் எவை என்பதை நாம் பார்ப்போம்.

3 comments:

சக்திவேல் said...

மனுவின்மூலம் இப்படி பொய் புரட்டுகளைக்கூறி ஒடுக்கி வைத்திருந்ததை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே.

gowtham sham said...

கௌசிகருக்கு வசிஷ்டர் பட்டம் கொடுத்தாரா?

gowtham sham said...

தோற்றவனுக்கு வெற்றி பெற்றவன் எப்படி பிரம்மரிஷி பட்டம் கொடுக்க முடியும்??

Text Widget

Text Widget