இடஒதுக்கீடு! - சமூக நீதிப் போராட்டத்தின் தொடக்கம்
'ஏன் இந்நிலை?' என்னும் சிந்தனை கூட எழவில்லை. 'வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவதே' வாழ்க்கைத் தத்துவம் என்று கருதிய மக்களே இங்கு பெரும்பான்மையினராக இருந்தனர்.
1892ஆம் ஆண்டு, அனைவருக்கும் வேலைப் பகிர்வு வேண்டும் என்று கூறி, பார்ப்பனரல்லாத பலர் கையொப்பமிட்டு, அன்றைய சென்னைத் தலைமாகாண (Madras Presidency) ஆளுநராக இருந்த வென்லெக்கிடம் மனுக் கொடுத்தனர். அதற்கும் எவ்விதப் பயனும் ஏற்படவில்லை.
அவ்வமைப்பின் தொடர்ச்சியாகவும், வளர்ச்சியாகவும் 1916ஆம் ஆண்டின் இறுதியில் 'தென் இந்திய நல உரிமைச் சங்கம்' என்னும் அமைப்பு உருவானது. சி.நடேசனார், சர்.பிட்டி.தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர் அதனை உருவாக்கிய சிற்பிகள் ஆவர். அமைப்பின் சார்பில் 'நீதி' (Justice)என்னும் பத்திரிகை வெளியிடப்பட்டது. அதனைக்கொண்டு, அவ்வமைப்பு சுருக்கமாக 'நீதிக்கட்சி' (Justice party) என்று அனைவராலும் அறியப்பட்டது.
இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை, நீதிக்கட்சி மிக வலிமையாக உயர்த்திப் பிடித்தது. அதனால் அக்கட்சியின் செல்வாக்கு, தமிழ்நாட்டிலும், அன்று சென்னைத் தலைமாகாணத்தில் இணைந்திருந்த தென்னிந்தியப் பகுதிகளிலும் மிக விரைந்து பரவியது.
அதனைக் கண்ட காங்கிரஸ் கட்சிக்குள்ளும் விவாதம் பரவியது. காங்கிரசில் இருந்த பார்ப்பனர் அல்லாதோர் ஒருங்கிணைந்து 'சென்னைத் தலைமாகாண சங்கம்' (Madras presidency Association) என ஒன்றை உருவாக்கினர். பெரியார், திரு.வி.க. போன்றோர் அச்சங்கத்தில் பொறுப்பாளர்களாக இருந்தனர். அச்சங்கமும் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை முன்வைத்தது.
இடஒதுக்கீடு என்பது, வேலை வாய்ப்புகளில் மட்டும் இடம் கோருகின்ற கோரிக்கை அன்று. கல்வி, வேலை, அரசியல் என மூன்று தளங்களிலும், அனைத்துச் சாதியினருக்கும் சம உரிமை கோருகின்ற சமூக நீதிப் போராட்டத்தின் தொடக்கமே அது என்பதைத் தமிழ்ச் சமூகம் மெல்ல மெல்ல உணர்ந்தது.
இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் வி.பி.சிங் கூறியதைப்போல, ''இட ஒதுக்கீடு என்பது, அதிகாரக் கட்டமைப்பில், சமூகத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட அனைத்துச் சாதியினருக்கும் பங்கு அளிப்பதுதான்.'' (It is a question of power sharing and not jobs alone)
எப்போதும், எந்தச் சமூகத்திலும், சமூக மாற்றத்திற்கு முன்னோடியாக அமைவது, அதிகாரக் கட்டமைப்பின் மாற்றமே ஆகும். 'உயர் சாதியினர்' எனப்படுவோரிடம் மட்டுமே தேங்கிக் கிடக்கும் அதிகாரங்களை, அனைத்துச் சாதியினருக்கும் பகிர்ந்தளிக்கும் ஜனநாயகப் பாத்திரத்தைத்தான் இடஒதுக்கீடு செய்கிறது.
இதனைத் தெளிவாக உணர்ந்த இஸ்லாமியர்கள், 'முஸ்லீம் லீக்' கட்சி தொடங்கப்பட்ட உடனேயே இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையையே முதலில் முன்னிறுத்தினர். 1906 அக்டோபர் 1ஆம் நாள், ஆகாகான் தலைமையில், அன்றைய தலைமை ஆளுநர் மிண்டோவைச் சந்தித்து, இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு கோரினர்.
அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, 1909ஆம் ஆண்டு, மின்மோலிமார்லி சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்லாமியர்களுக்குத் தேர்தல்களில் தனித்தொகுதிகள் வழங்கப்பட்டன. அரசியல் தளத்தில் மட்டுமே அந்த இடஒதுக்கீடு அமைந்தது என்னும், இந்திய வரலாற்றில் அரசு வழங்கிய முதல் இடஒதுக்கீடு இதுவேயாகும்.
அவ்வொதுக்கீடு, நீதிக்கட்சிக்கும், சென்னைத் தலைமாகாணச் சங்கத்திற்கம் பெரிய உந்து சக்தியாக இருந்தது. 1917லி20ஆம் ஆண்டிகள் முழுவதும், தமிழகத்தின் அரசியல் கோரிக்கையாக அதுவே ஒலித்தது. அந்நிலை 1920ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நீதிக்கட்சிக்குப் பேருதவி செய்தது.
அவ்வாண்டின் இறுதியில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்ற நீதிக்கட்சி, 17.12.1920இல், சென்னை மாகாண அமைச்சரவையை அமைத்தது. பதவியேற்றவுடனேயே, அரசு வேலை வாய்ப்புகளில் அனைத்து மதத்தினர், சாதியினருக்கம் இடஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.
1921ஆம் ஆண்டு வெளியான அந்த ஆணைப்படி, பின்வருமாறு அரசு வேலைகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டன.
1. பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் | 44% |
2. பார்ப்பனர்கள் | 16% |
3. முசுலீம்கள் | 16% |
4. ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறித்துவர்கள் | 16% |
5. தாழ்த்தப்பட்டோர் | 8% |
____ 100 ____ |
இவ்வாணைக்கு 'உயர் சாதியினரிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தாலும், அதிகாரிகள் அனைவரும் அவர்களாகவே இருந்தமையாலும், அவர்களின் கைகளிலேயே அனைத்துப் பத்திரிகைகளும் இருந்தமையாலும், இடஒதுக்கீட்டு ஆணைக்கு எதிராகக் கிளம்பிய ஆரவாரத்தை ஆளும் கட்சியால் சமாளிக்க முடியவில்லை. அதனால், ஆட்சிக்காலம் முடிந்த 1916ஆம் ஆண்டு வரையில், ஆணையை அவர்களால் நடைமுறைப்படுத்த இயலவில்லை.
எனினும் அந்தக் காலகட்டத்தில்தான், தேவதாசி ஒழிப்புச் சட்டம், இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் முதலானவை உருவாக்கப்பட்டன.
1916ஆம் ஆண்டு தேர்தலில், காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தனர். (அப்போதே தேர்தல் கூட்டணி ஏற்பட்டுவிட்டது)
அந்த ஆட்சியில், பத்திரப் பதிவுத்துறை அமைச்சராக இருந்த எஸ்.முத்தையா முதலியார்தான் 1927இல், வகுப்புவாரி ஆணையை முதன் முதலாக நடைமுறைப்படுத்தினார்.
'கம்யூனல் ஜி.ஓ' (Communal G.O) என்று அறியப்பட்டு, புகழ்பெற்ற ஆணையாக அது இன்றும் விளங்குகின்றது. தமிழக வரலாற்றில் மிகப்பெரும் மாற்றத்தையும், புரட்சியையும் ஏற்படுத்திய ஆணையாக (G.O.M.S.No. 1071 - 04.11.27) அது அமைந்தது. அவ்வாணை தொடங்கியே, ஆயிரம் ஆண்டுகளாகக் கல்வி, வேலை உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகம், முன்னேற்றப் பாதையில் முதல் அடி எடுத்து வைத்தது.
ஆணையை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், துறை வாரியாகப் பல்வேறு தொடர் ஆணைகளை வெளியிட்டு, 1929ஆம் ஆண்டிற்குள், அதன் பயன்களையும் காணச் செய்த பெருமை முத்தையா முதலியாருக்கே உண்டு. அதனால்தான் தந்தை பெரியார் 'முத்தையா முதலியார் வாழ்க' என்று தலையங்கம் எழுதியதோடு, தன் அண்ணன் மகன் ஈ.வெ.கி.சம்பத் திருமணத்தையும் அவர் தலைமையிலேயே நடத்தினார்.
ஆனால் அந்த ஆணையும், இடஒதுக்கீட்டுக் கொள்கையும், இன்னொரு புறத்தில் மிகக் கடுமையாக இன்று வரை எதிர்க்கப்படுகின்றன.
2006 ஆம் ஆண்டு வெளிவந்துள்ள, ''Falling over Backwards'' என்னும் தன் நூலில், அருண்சௌரி, இட ஒதுக்கீடுடுக் கொள்கையை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். 1906ஆம் ஆண்டு, இசுலாமியர்கள் இடஒதுக்கீடு கோரிக் கொடுத்த மனுவே, வெள்ளைக்காரர்களால் தயாரிக்கப்பட்டதுதான் என்கிறார் அவர். 'சிம்லாவின் அந்த நாள்தான்' (1911 வரை சிம்லாதான் தலைநகர்) இந்திய மக்களின் மனங்களில் பிரிவினையை விதைத்த நாள் என்பது அவர் கூற்று. இடஒதுக்கீட்டின் பேரில், இந்துக்களிடம் பிரிவினை எண்ணத்தை வெள்ளையர்கள் திட்டமிட்டு உருவாக்கினர் என்றும், 'பிரித்தாளும் சூழ்ச்சியே இடஒதுக்கீடு' என்றும் கோபக் கணைகளை அவர் வீசுகின்றார் அருண்சௌரி ஒரு குறியீடு மட்டுமே. உயர்சாதியினர் என்று தம்மைக் கருதிக் கொண்டிருக்கும் அனைவரின் எண்ணமும் அதுதான்.
நாட்டை ஆளவந்த அந்நியர்கள், உள்நாட்டு மக்களைப் பிரித்தாள முயல்வார்கள் என்பது இயற்கையே. ஆனால் பிரிவினைகளும், ஏற்றத் தாழ்வுகளும் வெள்ளையர்கள் ஏற்படுத்தியவை அல்ல. அவை இந்து மதத்தின் பிரிக்கப்பட முடியாது பகுதிகள் என்பதே உண்மை. அவற்றை அந்நியர் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். எனினும், ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி, அவற்றைப் பேணிப் பாதுகாத்த குற்றவாளிகள் யார் என்பதை நாம் மறைக்க முடியாது.
ஏற்றத்தாழ்வே, ஒரு சமூகத்தின் அடிப்படை வடிவமாக இருக்குமெனில், அதனை உடைத்தெறியும் ஜனநாயகச் சமத்துவக் கடமை புதிய தலைமுறைக்கு உண்டு என்பதையே, இடஒதுக்கீட்டுக் கோரிக்கை நமக்கு உணர்த்துகின்றது.
ஆனாலும், 'ஏற்றத்தாழ்வு' என்னும் நச்சுமரத்தை, 1927ஆம் ஆண்டு 'கம்யூனல் ஜி.ஓ' வால், ஒரே வீச்சில் வெட்டி வீழ்த்திவிட முடியவில்லை. அதன்பின்னும் பல போராட்டங்கள் நடைபெற்றன அல்லது அதன் பிறகுதான் பல போராட்டங்கள் தொடங்கின.
5 comments:
தந்தை பெரியார் காலத்தில் தான் இட ஒதுக்கீட்டுப் போராட்டங்கள் தொடங்கியதாக நினைத்திருந்தேன் இப்போதுதான் உண்மையறிந்தேன்,
நன்றி.
அந்தக் காலத்தில் பார்ப்பனல்லாதோர்
வணிகம்,தொழில்,நில உடமை போன்றவற்றில் முதலிடத்தில்
இருந்தனர்.காலனிய ஆட்சிக்கு முன் கல்வி என்பது ஒரு
குறிப்பிட்ட சாதிக்கு மட்டும்
கிடைத்தது என்றில்லை.
தரம்பாலின் ஆய்வுகள் ஆங்கிலேயர்
விட்டுச் சென்ற ஆவணங்கள் அடிப்படையில் கல்வி என்பது
பல சாதியினருக்கும் கிடைத்தது
என்று காட்டுகின்றன. மேலும்
இந்தியாவில் கல்லூரிகள் போன்றவை
தொடங்கப்பட்டு 200 ஆண்டுகள் கூட
ஆகிவிடவில்லை. மேலும் அன்று கல்வியறிவே பொதுவாக குறைவாக
இருந்தது. பார்பனர்களிலும்
கல்வியறிவு பெறாதோர் இருந்தனர்.
வரலாற்றை திரிப்பதே உங்கள் தொழில் என்பதால் இதையெல்லாம்
சொல்ல வேண்டியுள்ளது.
உங்கள் பணி மிகவும் போற்றுதலுக்குறியது, இந்த வரலாற்று நிகழ்ச்சிகளை என்னால் முடிந்தளவு பரப்புரை செய்கிறேன்.உங்களைப்போல தோழர் கொளத்தூர் மணி அவர்கள் இடஒதுக்கீடு பற்றிய பேச்சின் பதிப்பு படிக்க வாய்ப்பு கிட்டியது, அதிலிருந்து மேலும் பல உண்மைகள், கிரீமீலேயர் விளக்கம் படிக்க நேர்ந்தது.ஒருதலைமுறையில் நாம் படிக்க துவங்கியதையே ஆதிக்கசக்திகளால் தாங்க முடிவதில்லை என்பது இடஒதுக்கீடு குறித்து அவர்கள் கொண்டுள்ள எண்ணங்களாலேயே அறியப்படும்.
அய்யா..உங்களின் அடுத்த பிரதியை ஆர்வமுடன் எதிர் பார்கிறேன்!
Rajarajan R
//**
காலனிய ஆட்சிக்கு முன் கல்வி என்பது ஒருகுறிப்பிட்ட சாதிக்கு மட்டும் கிடைத்தது என்றில்லை.
**/
வேதம் மட்டுமே கல்வியாக இருந்த அந்த காலத்தில், வேதம் படிக்க உரிமையுள்ள ஒரே வகுப்பினர் பிராமனர் என்று மனுவில் சொல்லியிருக்கின்றது என்று மனுவை எழுதிய பிராமணர்கள் சொல்லி வேறு தமிழர்கள் யாரையும் படிக்கவிடவில்லை. ஏதோ காமராஜர், பெரியார் போன்றவர்களின் ஒப்புயர்வற்ற செயல்பாடுகளால் தமிழர்கள் கொஞ்சமேனும் படித்துவருகிறார்கள். 2000 வருடமாக படித்துக்கொன்டிருப்பவர்களுடன் 50 வருடங்களாக படித்துக்கொன்டிருப்பவர்கள் போட்டியிடல் சற்று கடினம்தான், ஆனாலும் ஐயா திரு சுபவீ போன்ற முனைப்பளர்களின் துனையுடன் போட்டியில் தமிழர்கள் வெல்லும் காலம் சீக்கிரம் வரும்.
Post a Comment