Monday, December 10, 2007

கனவு....காதல்....கொஞ்சம் கடமை! - 2


2

தான் ஒரு கட்சியின் ஆதரவாளன் என்பதெல்லாம் தரக்குறைவானது என்னும் எண்ணம் மாணவர்களிடம் எந்தக் காலகட்டத்தில் ஏற்பட்டது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.


இந்திய விடுதலைப் போராட்டக் காலத்திலிருந்தே மாணவர்களுக்கு அரசியலில் நேரடித் தொடர்பு உள்ளது. 'வெள்ளையனே வெளியேறு' என்பது மாணவர்களிடமிருந்தும் வெளிப்பட்ட முழக்கம்தான். அண்ணல் காந்தியடிகளே, மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.


மாணவர்களை அரசியலுக்கு அழைக்கலாமா என்ற விவாதம் அப்போதே எழுந்தது. படிக்கும் காலத்தில் படிப்புத்தான் முக்கியம் என்றாலும், நம் வீட்டு வயலில் ஒரு மாடு புகுந்து பயிர்களை எல்லாம் அழிக்கும்போது, அந்த மாட்டை விரட்ட வேண்டிய கடமை மாணவன் உள்ளிட்ட அனைவருக்கும் உண்டுதானே என்று விடையிறுக்கப்பட்டது. மாட்டை விரட்ட வேண்டிய உடனடி வேலைக்காகப் படிப்பைச் சற்று ஒத்தி வைப்பதில் பிழையில்லை என்பதே பெரும்பான்மையோரின் கருத்தாக இருந்தது. அந்த அடிப்படையில் அரசியலில் மாணவர்களின் பங்கேற்பு அன்று வரவேற்கப்பட்டது.


இந்தியா விடுதலை பெற்ற பின்பும், அரசியலில் மாணவர்களும், இளைஞர்களும் பங்கேற்கவே செய்தனர்.



தி.மு.கழகம் தொடங்கப்பெற்றபோது (1949), அண்ணாவைத் தவிர முதல்வரிசைத் தலைவர்கள் பலர் முப்பது வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருந்தனர். அதனால் தி.மு.க. என்பதே, ஓர் இளைஞர் அணி போலத்தான் தோற்றமளித்தது. அண்ணா கூட, மாணவர்களை அரசியலில் ஈடுபடச் சொல்லவில்லை. ''அரசியலை அறிந்துகொள்வதில் தவறில்லை, ஆனால் அவர்கள் அதில் ஈடுபட வேண்டியதில்லை'' என்றே அவர் கூறினார். ஆனால் அதனையும் மீறி அன்றைய மாணவர்கள் அரசியலில் முழுமையாக ஈடுபட்டனர்.

விடுதலைப் போராட்டத்திற்குப் பிறகு, இருபதாம் நூற்றாண்டில் தமிழகம் கண்ட மாபெரும் போராட்டம் அதுதான். தமிழகத்தின் தெருக்கள் தீப்பிடித்துக் கொண்டன. 'உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு' என்னும் முழக்கம் வானைப் பிளந்தது. கலவரமும், அடிதடியும், துப்பாக்கிச் சூடுமாய், அந்த இரத்தம் தோய்ந்த ஐம்பது நாள்கள் வரலாற்றின் ஏடுகளில் பதிவாயின.

தமிழகத்திலாவது மாணவர்கள் போராடியதோடு நின்று கொண்டனர். ஆனால் 1970களில், அசாம் மாணவர்கள் போராடி, மக்கள் சக்தியாய்த் திரண்டெழுந்து ஆட்சிக் கட்டிலிலேயே அமர்ந்து காட்டினர்.

இப்படிப் பல செய்திகள் நம்மிடம் உள்ளன. எனினும் கொஞ்சம் கொஞ்சமாய் இளைஞர்கள் அரசியலிலிருந்து அந்நியப்பட்டு நிற்கத் தொடங்கினர். அரசியல் மீதும், அரசியல்வாதிகளின் மீதும் ஒருவிதமான அருவெறுப்பு வளரத் தொடங்கியது.

1960லிகளில் தமிழக அரசியலையே மாணவர்கள்தாம் தீர்மானித்தார்கள் என்பது மிகையில்லை. சென்னை பச்சையப்பன் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல், மருத்துவம், பொறியியல், வேளாண்மை பயின்ற மாணவர்களும் 1965ஆம் ஆண்டு நேரடியாக, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த விபத்து என் தலைமுறையின் இளமைக் காலத்தில்தான் துளிர் விடத் தொடங்கியது. இன்று அது வளர்ந்து மரமாய் ஆகியுள்ளது.

1970களின் நடுப்பகுதியில், ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடமே அறிவியல் பயிலும் மாணவர்கள் என்றும், கலையியல் பயிலும் மாணவர்கள் என்றும் இருவேறு பிரிவுகள், இருவேறு 'சாதிகளைப்' போல வளரத் தொடங்கின.


பொதுவாகவே, பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் அறிவியல் படிப்புகளான கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல் நோக்கியும், குறைந்த மதிப்பெண்களைப் பெற்றவர்கள் இலக்கியம், வரலாறு, பொருளியல் முதலான படிப்புகளை நோக்கியும் பிரிந்தனர். எனவே, அறிவியல் படிப்பு, நாளை உலகை மாற்றப்போகும் 'மேல் ஜாதியாகவும்', கலைப் படிப்பு, உலக வாழ்க்கைக்கு உதவாத 'கீழ்ச் சாதியாகவும்' கருதப்பட்டது.

குறிப்பாக, வரலாற்றுப் பாடத்தைக் கேலி செய்யும் தன்மை பரவலாக எழுந்தது. 'அசோகன் சத்திரம் கட்டினான், சாவடி கட்டினான், வீதிகளில் மரம் நட்டான்' என்பதையெல்லாம் படிப்பதால் இப்போது என்ன பயன்? என்ற எண்ணம் எழுந்தது.


அவ்வாறே, தமிழ் இலக்கியம் என்றாலே, 'என்னப்பா, தலைவன்லிதலைவி, அகநானூறு, புறநானூறு, ஒன்றுக்கும் பயன்படாத படிப்பு' என்ற கேலி எழுந்தது.
தமிழ் திரைப்படங்களில் கூட அந்தத் தாக்கம் இருந்தது. மற்ற ஆசிரியர்களெல்லாம் இயல்பாக இருக்க, தமிழாசிரியர் மட்டும் ஒரு கோமாளி போலவே சித்தரிக்கப்பட்டிருப்பார்.

இதுபோன்ற போக்குகள், அறிவியல் மாணவர்களிடம் ஒரு பெருமித உணர்ச்சியையும், வரலாறு, இலக்கியம் பயிலும் மாணவர்களிடையே ஒரு தாழ்வுணர்ச்சியையும் உருவாக்கியது.

ஆசிரியர்கள் சிலரும் இதற்குக் காரணமாயிருந்தனர். ''ஏம்பா, நீங்க எல்லாம் சயின்ஸ் ஸ்டூடன்ஸ் இல்லையா, அவனுங்க கூட சேர்ந்துகிட்டு ஸ்டிரைக் பண்றீங்களே... நாளைக்கு இன்டர்னல் மார்க்லே சுழிச்சோம்னா என்ன ஆவிங்க?'' என்று அறிவியல் துறை ஆசிரியர்கள் சிலர் பேசுவதை நானே கேட்டிருக்கிறேன்.

வேலை நிறுத்தம் செய்வதெல்லாம், அரசியல்வாதிகளிடமிருந்து கற்றுக்கொண்டவை. சரியாகப் படிப்புவராத 'பி.ஏ.' பயிலும் மாணவர்கள்தான் அவற்றில் ஈடுபடுவார்கள். 'பி.எஸ்ஸி' மாணவர்களுக்கு அதெல்லாம் உதவாது என்ற கருத்துப் பரவியது.

பிறகு இன்னொரு மாதிரியான பிரிவும் ஏற்பட்டது, அல்லது எற்படுத்தப்பட்டது. மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்படிப்புப் பயிலும் வேறு, கலை அறிவியல் பயிலும் கலைக்கல்லூரி மாணவர்கள் வேறு என்ற எண்ணம் எழுந்தது. தொழில் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது? எதற்கும் இருக்கட்டும் என்று, கலைக் கல்லூரிகளில் விண்ணப்பம் போடும் நிலையும் எழுந்தது.
இவ்வாறு, கல்வி நிலையங்களுக்குள் வர்க்கங்களும், சாதிகளும் உருவாயின. மேல்தட்டினர் என்ற கருத்துருவாக்கத்திற்கு உள்ளானவர்கள், அரசியலின் பக்கம் போவது நாகரிகக் குறைவானது என்று எண்ணத் தொடங்கினார்கள்.
இந்நிலையில் அடுத்த கட்ட பரிணாமும் உருவானது. 1980களின் இறுதியில், பள்ளிகளிலும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என்று புதுவகைப் பள்ளிகள் தோன்றின. அரசுப் பள்ளிகளையும், அரசு உதவிபெறும் பள்ளிகளையும் விட இங்கு பாடங்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும். அத்தோடு மட்டுமில்லாமல், அனைத்துப் பாடங்களையும் ஆங்கில வழியில் கற்க வேண்டும். தமிழை ஒரு பாடமாக, அதுவும் விருப்பப் பாடமாக மட்டும் படித்தால் போதுமானது.

இச்சூழலின் மாற்றம், மாணவர்களை மேலும் இரு கூறாக்கியது. ஆங்கில வழியில் பயிலும், நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் மாணவர்கள் அறிவாளர்கள் எனவும், தமிழ்வழிப் பயில்வோர் பாமரர்கள் எனவும் ஒரு கருத்து உருப்பெற்றது.

பள்ளி, கல்லூரிகளின் படிப்பு நல்ல வேலை பெறுவதற்காகவும், அதன் மூலம் நல்ல ஊதியம் பெறுவதற்காகவும்தான் என்று முடிவே ஆகிவிட்டது. வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், எந்த ஒரு சமூகச் சிக்கல் குறித்தும் கவலை கொள்ளாமல், தான் உண்டு, தன் படிப்பு உண்டு என்று இருக்கும் மாணவர்களே நல்ல மாணவர்கள் என்ற கற்பிதம் நாளுக்கு நாள் வலுப்பெற்றது.

இப்படித்தான் கல்வியும், சமூகமும் ஒன்றுக்கொன்று அந்நியமாய்ப் போயின. சமூகப் பண்பையும், பொதுநல எண்ணத்தையும் வளர்க்க வேண்டிய கல்வி, சுய முன்னேற்றம் ஒன்றே வாழ்வின் நோக்கம் என்ற நிலைக்கு நம்மை இழுத்துச் சென்றுவிட்டது.

அதன் விளைவாக, அரசியலற்ற படிப்பாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது... செல்கிறது. இதனைத் தனிமனிதர்களின் குறைபாடு என்று நான் கூற வரவில்லை. இது ஒரு சமூகக் குறைபாடே.

இக்குறைபாட்டில் இன்றைய தலைமுறை சிக்கித் தவிப்பதற்கு, நேற்றைய தலைமுறைதான் பெரும் பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது. சரி, சென்ற தலைமுறை ஏன் அந்தக் குறைபாட்டிற்குக் காரணம் ஆயிற்று!

1 comment:

வரலாறு.காம் said...

அருமையான அலசல்.

பல காலமாக ஏன், எதற்கு, எப்படி இச்சமூகம் இப்படி மாறியது என்று என்னுள் குடைந்துகொண்டிருந்த பல கேள்விகளுக்கான விடைகளை விளக்குகிறது.

நன்றி
கமலக்கண்ணன்
www.varalaaru.com

Text Widget

Text Widget