Hello world!
29 Comments - 16 Aug 2009
Welcome to Blogger. This is your first post. Edit or delete it, then start blogging!...

More Link
An image in a post
6 Comments - 16 Jul 2009
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Quisque sed felis. Aliquam sit amet felis. Mauris semper, velit semper laoreet dictum, quam diam dictum urna, nec placerat elit nisl in quam. Etiam augue pede, molestie eget, rhoncus at, convallis ut, eros. Aliquam pharetra. Nulla in tellus eget odio sagittis blandit. Maecenas at nisl. Null...

More Link

Saturday, December 22, 2007

கனவு....காதல்....கொஞ்சம் கடமை! - 3

3

படிப்பு, எந்நேரமும் படிப்பு... தொழில் கல்வியில், குறிப்பாக கணிப்பொறிக் கல்வியில் பட்டமும், நல்ல மதிப்பெண்களும்... தேர்வுகள் முடிவதற்கு முன்பே வளாக நேர்காணலில் (Campus Interviews) வேலை வாய்ப்பு... பிறகு நல்ல ஊதியம், சொந்த வீடு, வெளி நாடுகளை நோக்கிப் பயணம் என்று பிள்ளைகளைப் பெற்றோர்கள் வழிப்படுத்தினார்கள். பிழை ஒன்றும் இல்லை. உழைப்பின் அடிப்படையில்தான் முன்னேற்றத்தை எதிர்ப்பார்க்கின்றனர். தொழில் அறிவும், உழைப்பும் ஒருவனை உயர்த்துவது மகிழ்ச்சிக்குரியதே!

ஆனால், சமூக அக்கறையும், பொதுவாழ்வில் தம் பிள்ளைகள் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமும் பின்னுக்குப் போய், ஒருவருக்குப் படிப்பறிவு மட்டும் போதும் அல்லது அது ஒன்றே எதைக் காட்டிலும் மேலானது என்று என் தலைமுறை ஏன் கருதியது? அதற்கு ஒரு நியாயமான காரணம் இருக்கிறது.

நான் அறிந்தவரையில், எனக்கு முந்தைய தலைமுறையில் படித்தவர்கள், ஒரு குறிப்பிட்ட சமூகம் தவிர, வேறு எந்தச் சமூகத்திலும் ஐந்து விழுக்காடு கூட இல்லை. எங்களின் தாயோ, தந்தையோ, பெரியப்பாவோ, அத்தையோ ஏடெடுத்துப் படித்ததில்லை. எழுத்தறிய வாய்ப்புமில்லை. அம்மா, அப்பா நிலையே இதுதான் என்றால், பாட்டி, தாத்தா பற்றிக் கேட்கவே வேண்டாம்.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, புத்தகமும், பேனாவும் தூக்கிய முதல் தலைமுறை நாங்கள்தான். சங்ககாலம் என்று அறியப்படும் காலத்தில், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு படிப்பு பொதுவானதாக இருந்தது. ஓதலும் தூதும் 'உயர்ந்தோருக்கு' மட்டுமே உரியது எனத் தொல்காப்பியத்திலேயே ஒரு குறிப்பு உள்ளபோதும், 'வேற்றுமை தெரிந்த நூற்பாலுள்ளும், கீழ்ப்பால்' ஒருவனும் கற்க முடிந்தது. பெண்களுக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு இருந்துள்ளது. அதனால்தான் சங்க இலக்கியங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட பெண் புலவர்களின் பாடல்களைக் காண முடிகிறது.

ஆனால் பல்லவர்களின் காலத்தில் படிக்கும் உரிமை கொஞ்சம் கொஞ்சமாக மறுக்கப்பட்டது. தமிழ்ப் படிப்பிற்கான மதிப்புக் குறைந்து, சமஸ்கிருதப் படிப்பு மேலானதாகக் கருதப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ஏறத்தாழ 5000 மாணவர்கள், திருவொற்றியூர், காஞ்சிபுரம், பாகூர் (புதுவை மாநிலம்) ஆகிய மூன்று ஊர்களில் மட்டும் சமஸ்கிருதம் படித்துக்கொண்டிருந்தாய் ஒரு சீனப் பயணி தன் குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.

பிற்காலச் சோழர் காலத்தில், அதுவும் ராஜராஜசோழன் ஆட்சிக்கு வந்த பின்னர், ஒரு வருணத்தினருக்கு மட்டுமே படிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. சத்திரிய வருணத்தார் படைவீரர்கள் என்றும், வைசிய வருணத்தார் வணிகர்கள் என்றும், சூத்திர வருணத்தார் ஏவல் வேலை செய்வோர் என்றும் முடிவே ஆகிவிட்டது. அதற்கு அரசின் முழு ஆதரவும் கிடைத்தது

நான்கு வருணங்களுக்கும் வெளியில் சிலர் நிறுத்தப்பட்டனர். அவர்கள் அவருணத்தார் என்றும் பஞ்சமர் (ஐந்தாவது வகையினர்) என்றும் அழைக்கப்பட்டனர். அவர்கள் தீண்டாமை, நெருங்காமை, பாராமை ஆகிய கொடூரங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

நாயக்கர்களின் ஆட்சிக் காலமோ, வருணாசிரம (அ) தர்மம் கொடிகட்டிப் பறந்த காலமாக இருந்தது. ஆக, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, ஏறத்தாழ 80-90 சதவீத மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது.

அதன்பின் ஆட்சிக்கு வந்த வெள்ளையர்கள் நம்மை அடிமைகள் ஆக்கினர். ஆயிரம் தீமைகள் நமக்குச் செய்தனர். நம் உழைப்பை கனிவளங்களைச் சுரண்டினர். அனைத்தும் உண்மைதான்.

ஆனால் ஒரு மிகப்பெரும் நன்மையையும் செய்தனர். 1836ஆம் ஆண்டு, பொதுக் கல்வித் திட்டம் (Public School Scheme) என ஒன்றை அறிமுகப்படுத்தினர். அதுவே, அடக்கப்பட்டு, அடிமைகள் ஆக்கப்பட்டு, இருட்டில் கிடந்த எண்ணற்ற மக்களுக்குக் கிடைத்த முதல் வெளிச்சம். சின்ன நம்பிக்கை.

அதுவும்கூட ஏறத்தாழ இன்னொரு எழுபது, எண்பது ஆண்டுகளுக்கு ஏட்டளவில் மட்டும்தான் இருந்தது. 1911-1921ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட குடிமதிப்பின் (Census) கணக்கின்படி, ஒவ்வொரு சமூகத்திலும் படித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? கீழே உள்ள புள்ளிவிரவரத்தைப் பாருங்கள்:


பஞ்சமர் அல்லது தலித்துகள் என இன்று அழைக்கப்படும் உழைக்கும் மக்கள் பட்டியலுக்கே வரமுடியாத நிலையில் இருந்ததையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

இதுதான் 87 ஆண்டுகளுக்கு முந்தைய நம் சமூகநிலை. 1960களுக்குப் பிறகுதான் மெல்ல மெல்லக் கல்விக் கதவுகள் நமக்குத் திறந்தன.
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, 'காணாததைக் கண்ட' எம் பெற்றோர்கள், அடித்து உதைத்து எங்களைப் பள்ளிகளுக்கு அனுப்பினார்கள். ''கண்ணு ரெண்டையும் விட்டுட்டு, வேற எங்க வேணும்னாலும் அடிங்க. புள்ளை படிச்சாப் போதும்'' என்று எங்கள் ஆசிரியர்களிடம் கருணை மனு நீட்டினார்கள்.

என் தலைமுறை படிக்கத் தொடங்கியது. எட்டாம் வகுப்பைச் சிலர் எட்டிப் பிடித்தார்கள். பதினோறாம் வகுப்பு (S.S.L.C), பெரிய பட்டப் படிப்பு போலக் கருதப்பட்டது. அதுவரை வந்தார்கள் சிலர். கல்லூரிக்குள் காலடி வைத்து, நான்காண்டுகள் படித்து முடித்து, பட்டம் வாங்கி, கறுப்பு உடையில் படம் எடுத்து, வீடுகளில் பெரிதாய் மாட்டி வைத்துக்கொண்டனர். என்னைப் போல் சிலர்.

அந்தப் படிப்பும், பட்டமும் அரசாங்கத்தில் சில வேலைகளை எங்களுக்குப் பெற்றுத்தந்தன. ஆண்டுக்கு 7 ரூபாய் ஊதிய உயர்வு என்பதை நாங்கள் ஆனந்தமாய்க் கொண்டாடினோம்.

உழவும், நெசவும், மீன்பிடித் தொழிலும், வேறு சில உதிரி வேலைகளும் தவிர, வேறு உலகம் தெரியாத எம் பெற்றோரிடமிருந்து நாங்கள் விலகி, அரசாங்கக் கட்டிடத்தில், மின் விசிறியின் கீழ் அமர்ந்து 'குமாஸ்தா' வேலை பார்த்ததை எண்ணி எண்ணிக் குதூகலமடைந்தோம். நாங்கள்தான அரசாங்கத்தையே நடத்துவதாக எண்ணி இன்ப நடம்புரிந்தோம்.

அந்தக் கட்டத்தில்தான், எங்களுக்குத் திருமணமாகி, பிள்ளைகளே நீங்கள் பிறந்தீர்கள், உங்களை நல்ல முறையில் படிக்கவைத்து, இயன்றவரை ஆங்கிலத்தில் படிக்கவைத்து, அரசாங்கத்திலும், வங்கிகளிலும் அதிகாரிகள் ஆக்கிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டோம்.
குமாஸ்தாக்களுக்குத் தமிழ் போதும், அதிகாரிகளுக்கு ஆங்கிலம் வேண்டாமா? எனவே, 'அறம்செய விரும்பு, ஆறுவது சினம்' போன்றவைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, "Jack and Jill, went up the hill"; சொல்லிக் கொடுக்கும் பள்ளியைத் தேடிப்பிடித்து, மூன்று வயதிலேயே உங்களைப் பள்ளிக்கூடத்தில் தொலைத்துவிட்டோம்.

பள்ளிப் படிப்பு நம் வாழ்வின் ஒரு பகுதி என்பதை மறந்து, பள்ளிக்கே பிள்ளைகளை 'நேர்ந்து' விட்டது போல் ஆக்கிவிட்டோம். இன்று, நம் பிள்ளைகள், சமூகப் பார்வை அற்றவர்களாக இருக்கிறார்களே என்று நாங்களே நொந்து கொள்கிறோம்.

இப்போதும் கூடக் காலம் தாழ்ந்துபோய் விடவில்லை. கைக்கெட்டாத தூரத்தில் நீங்கள் காணாமல் போய்விடவில்லை.
'தம்மின் தம்மக்கள் அறிவுடைமை' என்பது போல, எங்களைக் காட்டிலும் அறிவியல் துறையிலும், தொழில் நுட்பத் துறையிலும் பன்மடங்கு முன்னேறி நிற்கும் நீங்கள், சமூகப் பார்வையும், சமூக அக்கறையும் உடையவர்களாக ஆகிவிடுவீர்களென்றால், 'ஓராயிரம் ஆண்டு ஓய்ற்து கிடந்த பின்னர், வாராது போல் வந்த மாமணியாய்' நம் எதிர்காலம் அமையும்.

''அது சரி, அப்படி என்ன எங்களுக்குச் சமூகப் பார்வையும், அக்கறையும் இல்லாமல் போய்விட்டது... நாங்களும் எங்களால் ஆன உதவிகளைப் பிறருக்குச் செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆண்டுக்கொரு முறை அநாதைப் பிள்ளைகளின் விடுதிகளுக்குச் சென்று அவர்களுக்கு உணவளிக்கிறோம். சில சமூக சேவைகளையும் செய்கிறோம். இதற்கெல்லாம் என்ன பெயர்'' என்று கேட்டு உங்களில் சிலர் கோபப்படக் கூடும்.

இவையெல்லாம் நல்ல செயல்கள்தான். ஆனால் சமூகப் பார்வை என்பது இவற்றிலிருந்தும் வேறுபட்டது. எப்படி என்கிறீர்களா?

Monday, December 10, 2007

கனவு....காதல்....கொஞ்சம் கடமை! - 2


2

தான் ஒரு கட்சியின் ஆதரவாளன் என்பதெல்லாம் தரக்குறைவானது என்னும் எண்ணம் மாணவர்களிடம் எந்தக் காலகட்டத்தில் ஏற்பட்டது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.


இந்திய விடுதலைப் போராட்டக் காலத்திலிருந்தே மாணவர்களுக்கு அரசியலில் நேரடித் தொடர்பு உள்ளது. 'வெள்ளையனே வெளியேறு' என்பது மாணவர்களிடமிருந்தும் வெளிப்பட்ட முழக்கம்தான். அண்ணல் காந்தியடிகளே, மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.


மாணவர்களை அரசியலுக்கு அழைக்கலாமா என்ற விவாதம் அப்போதே எழுந்தது. படிக்கும் காலத்தில் படிப்புத்தான் முக்கியம் என்றாலும், நம் வீட்டு வயலில் ஒரு மாடு புகுந்து பயிர்களை எல்லாம் அழிக்கும்போது, அந்த மாட்டை விரட்ட வேண்டிய கடமை மாணவன் உள்ளிட்ட அனைவருக்கும் உண்டுதானே என்று விடையிறுக்கப்பட்டது. மாட்டை விரட்ட வேண்டிய உடனடி வேலைக்காகப் படிப்பைச் சற்று ஒத்தி வைப்பதில் பிழையில்லை என்பதே பெரும்பான்மையோரின் கருத்தாக இருந்தது. அந்த அடிப்படையில் அரசியலில் மாணவர்களின் பங்கேற்பு அன்று வரவேற்கப்பட்டது.


இந்தியா விடுதலை பெற்ற பின்பும், அரசியலில் மாணவர்களும், இளைஞர்களும் பங்கேற்கவே செய்தனர்.



தி.மு.கழகம் தொடங்கப்பெற்றபோது (1949), அண்ணாவைத் தவிர முதல்வரிசைத் தலைவர்கள் பலர் முப்பது வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருந்தனர். அதனால் தி.மு.க. என்பதே, ஓர் இளைஞர் அணி போலத்தான் தோற்றமளித்தது. அண்ணா கூட, மாணவர்களை அரசியலில் ஈடுபடச் சொல்லவில்லை. ''அரசியலை அறிந்துகொள்வதில் தவறில்லை, ஆனால் அவர்கள் அதில் ஈடுபட வேண்டியதில்லை'' என்றே அவர் கூறினார். ஆனால் அதனையும் மீறி அன்றைய மாணவர்கள் அரசியலில் முழுமையாக ஈடுபட்டனர்.

விடுதலைப் போராட்டத்திற்குப் பிறகு, இருபதாம் நூற்றாண்டில் தமிழகம் கண்ட மாபெரும் போராட்டம் அதுதான். தமிழகத்தின் தெருக்கள் தீப்பிடித்துக் கொண்டன. 'உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு' என்னும் முழக்கம் வானைப் பிளந்தது. கலவரமும், அடிதடியும், துப்பாக்கிச் சூடுமாய், அந்த இரத்தம் தோய்ந்த ஐம்பது நாள்கள் வரலாற்றின் ஏடுகளில் பதிவாயின.

தமிழகத்திலாவது மாணவர்கள் போராடியதோடு நின்று கொண்டனர். ஆனால் 1970களில், அசாம் மாணவர்கள் போராடி, மக்கள் சக்தியாய்த் திரண்டெழுந்து ஆட்சிக் கட்டிலிலேயே அமர்ந்து காட்டினர்.

இப்படிப் பல செய்திகள் நம்மிடம் உள்ளன. எனினும் கொஞ்சம் கொஞ்சமாய் இளைஞர்கள் அரசியலிலிருந்து அந்நியப்பட்டு நிற்கத் தொடங்கினர். அரசியல் மீதும், அரசியல்வாதிகளின் மீதும் ஒருவிதமான அருவெறுப்பு வளரத் தொடங்கியது.

1960லிகளில் தமிழக அரசியலையே மாணவர்கள்தாம் தீர்மானித்தார்கள் என்பது மிகையில்லை. சென்னை பச்சையப்பன் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல், மருத்துவம், பொறியியல், வேளாண்மை பயின்ற மாணவர்களும் 1965ஆம் ஆண்டு நேரடியாக, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த விபத்து என் தலைமுறையின் இளமைக் காலத்தில்தான் துளிர் விடத் தொடங்கியது. இன்று அது வளர்ந்து மரமாய் ஆகியுள்ளது.

1970களின் நடுப்பகுதியில், ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடமே அறிவியல் பயிலும் மாணவர்கள் என்றும், கலையியல் பயிலும் மாணவர்கள் என்றும் இருவேறு பிரிவுகள், இருவேறு 'சாதிகளைப்' போல வளரத் தொடங்கின.


பொதுவாகவே, பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் அறிவியல் படிப்புகளான கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல் நோக்கியும், குறைந்த மதிப்பெண்களைப் பெற்றவர்கள் இலக்கியம், வரலாறு, பொருளியல் முதலான படிப்புகளை நோக்கியும் பிரிந்தனர். எனவே, அறிவியல் படிப்பு, நாளை உலகை மாற்றப்போகும் 'மேல் ஜாதியாகவும்', கலைப் படிப்பு, உலக வாழ்க்கைக்கு உதவாத 'கீழ்ச் சாதியாகவும்' கருதப்பட்டது.

குறிப்பாக, வரலாற்றுப் பாடத்தைக் கேலி செய்யும் தன்மை பரவலாக எழுந்தது. 'அசோகன் சத்திரம் கட்டினான், சாவடி கட்டினான், வீதிகளில் மரம் நட்டான்' என்பதையெல்லாம் படிப்பதால் இப்போது என்ன பயன்? என்ற எண்ணம் எழுந்தது.


அவ்வாறே, தமிழ் இலக்கியம் என்றாலே, 'என்னப்பா, தலைவன்லிதலைவி, அகநானூறு, புறநானூறு, ஒன்றுக்கும் பயன்படாத படிப்பு' என்ற கேலி எழுந்தது.
தமிழ் திரைப்படங்களில் கூட அந்தத் தாக்கம் இருந்தது. மற்ற ஆசிரியர்களெல்லாம் இயல்பாக இருக்க, தமிழாசிரியர் மட்டும் ஒரு கோமாளி போலவே சித்தரிக்கப்பட்டிருப்பார்.

இதுபோன்ற போக்குகள், அறிவியல் மாணவர்களிடம் ஒரு பெருமித உணர்ச்சியையும், வரலாறு, இலக்கியம் பயிலும் மாணவர்களிடையே ஒரு தாழ்வுணர்ச்சியையும் உருவாக்கியது.

ஆசிரியர்கள் சிலரும் இதற்குக் காரணமாயிருந்தனர். ''ஏம்பா, நீங்க எல்லாம் சயின்ஸ் ஸ்டூடன்ஸ் இல்லையா, அவனுங்க கூட சேர்ந்துகிட்டு ஸ்டிரைக் பண்றீங்களே... நாளைக்கு இன்டர்னல் மார்க்லே சுழிச்சோம்னா என்ன ஆவிங்க?'' என்று அறிவியல் துறை ஆசிரியர்கள் சிலர் பேசுவதை நானே கேட்டிருக்கிறேன்.

வேலை நிறுத்தம் செய்வதெல்லாம், அரசியல்வாதிகளிடமிருந்து கற்றுக்கொண்டவை. சரியாகப் படிப்புவராத 'பி.ஏ.' பயிலும் மாணவர்கள்தான் அவற்றில் ஈடுபடுவார்கள். 'பி.எஸ்ஸி' மாணவர்களுக்கு அதெல்லாம் உதவாது என்ற கருத்துப் பரவியது.

பிறகு இன்னொரு மாதிரியான பிரிவும் ஏற்பட்டது, அல்லது எற்படுத்தப்பட்டது. மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்படிப்புப் பயிலும் வேறு, கலை அறிவியல் பயிலும் கலைக்கல்லூரி மாணவர்கள் வேறு என்ற எண்ணம் எழுந்தது. தொழில் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது? எதற்கும் இருக்கட்டும் என்று, கலைக் கல்லூரிகளில் விண்ணப்பம் போடும் நிலையும் எழுந்தது.
இவ்வாறு, கல்வி நிலையங்களுக்குள் வர்க்கங்களும், சாதிகளும் உருவாயின. மேல்தட்டினர் என்ற கருத்துருவாக்கத்திற்கு உள்ளானவர்கள், அரசியலின் பக்கம் போவது நாகரிகக் குறைவானது என்று எண்ணத் தொடங்கினார்கள்.
இந்நிலையில் அடுத்த கட்ட பரிணாமும் உருவானது. 1980களின் இறுதியில், பள்ளிகளிலும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என்று புதுவகைப் பள்ளிகள் தோன்றின. அரசுப் பள்ளிகளையும், அரசு உதவிபெறும் பள்ளிகளையும் விட இங்கு பாடங்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும். அத்தோடு மட்டுமில்லாமல், அனைத்துப் பாடங்களையும் ஆங்கில வழியில் கற்க வேண்டும். தமிழை ஒரு பாடமாக, அதுவும் விருப்பப் பாடமாக மட்டும் படித்தால் போதுமானது.

இச்சூழலின் மாற்றம், மாணவர்களை மேலும் இரு கூறாக்கியது. ஆங்கில வழியில் பயிலும், நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் மாணவர்கள் அறிவாளர்கள் எனவும், தமிழ்வழிப் பயில்வோர் பாமரர்கள் எனவும் ஒரு கருத்து உருப்பெற்றது.

பள்ளி, கல்லூரிகளின் படிப்பு நல்ல வேலை பெறுவதற்காகவும், அதன் மூலம் நல்ல ஊதியம் பெறுவதற்காகவும்தான் என்று முடிவே ஆகிவிட்டது. வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், எந்த ஒரு சமூகச் சிக்கல் குறித்தும் கவலை கொள்ளாமல், தான் உண்டு, தன் படிப்பு உண்டு என்று இருக்கும் மாணவர்களே நல்ல மாணவர்கள் என்ற கற்பிதம் நாளுக்கு நாள் வலுப்பெற்றது.

இப்படித்தான் கல்வியும், சமூகமும் ஒன்றுக்கொன்று அந்நியமாய்ப் போயின. சமூகப் பண்பையும், பொதுநல எண்ணத்தையும் வளர்க்க வேண்டிய கல்வி, சுய முன்னேற்றம் ஒன்றே வாழ்வின் நோக்கம் என்ற நிலைக்கு நம்மை இழுத்துச் சென்றுவிட்டது.

அதன் விளைவாக, அரசியலற்ற படிப்பாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது... செல்கிறது. இதனைத் தனிமனிதர்களின் குறைபாடு என்று நான் கூற வரவில்லை. இது ஒரு சமூகக் குறைபாடே.

இக்குறைபாட்டில் இன்றைய தலைமுறை சிக்கித் தவிப்பதற்கு, நேற்றைய தலைமுறைதான் பெரும் பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது. சரி, சென்ற தலைமுறை ஏன் அந்தக் குறைபாட்டிற்குக் காரணம் ஆயிற்று!

Text Widget

Text Widget