ஆனால், சமூக அக்கறையும், பொதுவாழ்வில் தம் பிள்ளைகள் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமும் பின்னுக்குப் போய், ஒருவருக்குப் படிப்பறிவு மட்டும் போதும் அல்லது அது ஒன்றே எதைக் காட்டிலும் மேலானது என்று என் தலைமுறை ஏன் கருதியது? அதற்கு ஒரு நியாயமான காரணம் இருக்கிறது.
நான் அறிந்தவரையில், எனக்கு முந்தைய தலைமுறையில் படித்தவர்கள், ஒரு குறிப்பிட்ட சமூகம் தவிர, வேறு எந்தச் சமூகத்திலும் ஐந்து விழுக்காடு கூட இல்லை. எங்களின் தாயோ, தந்தையோ, பெரியப்பாவோ, அத்தையோ ஏடெடுத்துப் படித்ததில்லை. எழுத்தறிய வாய்ப்புமில்லை. அம்மா, அப்பா நிலையே இதுதான் என்றால், பாட்டி, தாத்தா பற்றிக் கேட்கவே வேண்டாம்.
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, புத்தகமும், பேனாவும் தூக்கிய முதல் தலைமுறை நாங்கள்தான். சங்ககாலம் என்று அறியப்படும் காலத்தில், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு படிப்பு பொதுவானதாக இருந்தது. ஓதலும் தூதும் 'உயர்ந்தோருக்கு' மட்டுமே உரியது எனத் தொல்காப்பியத்திலேயே ஒரு குறிப்பு உள்ளபோதும், 'வேற்றுமை தெரிந்த நூற்பாலுள்ளும், கீழ்ப்பால்' ஒருவனும் கற்க முடிந்தது. பெண்களுக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு இருந்துள்ளது. அதனால்தான் சங்க இலக்கியங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட பெண் புலவர்களின் பாடல்களைக் காண முடிகிறது.
ஆனால் பல்லவர்களின் காலத்தில் படிக்கும் உரிமை கொஞ்சம் கொஞ்சமாக மறுக்கப்பட்டது. தமிழ்ப் படிப்பிற்கான மதிப்புக் குறைந்து, சமஸ்கிருதப் படிப்பு மேலானதாகக் கருதப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ஏறத்தாழ 5000 மாணவர்கள், திருவொற்றியூர், காஞ்சிபுரம், பாகூர் (புதுவை மாநிலம்) ஆகிய மூன்று ஊர்களில் மட்டும் சமஸ்கிருதம் படித்துக்கொண்டிருந்தாய் ஒரு சீனப் பயணி தன் குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.
பிற்காலச் சோழர் காலத்தில், அதுவும் ராஜராஜசோழன் ஆட்சிக்கு வந்த பின்னர், ஒரு வருணத்தினருக்கு மட்டுமே படிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. சத்திரிய வருணத்தார் படைவீரர்கள் என்றும், வைசிய வருணத்தார் வணிகர்கள் என்றும், சூத்திர வருணத்தார் ஏவல் வேலை செய்வோர் என்றும் முடிவே ஆகிவிட்டது. அதற்கு அரசின் முழு ஆதரவும் கிடைத்தது
நாயக்கர்களின் ஆட்சிக் காலமோ, வருணாசிரம (அ) தர்மம் கொடிகட்டிப் பறந்த காலமாக இருந்தது. ஆக, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, ஏறத்தாழ 80-90 சதவீத மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது.
அதன்பின் ஆட்சிக்கு வந்த வெள்ளையர்கள் நம்மை அடிமைகள் ஆக்கினர். ஆயிரம் தீமைகள் நமக்குச் செய்தனர். நம் உழைப்பை கனிவளங்களைச் சுரண்டினர். அனைத்தும் உண்மைதான்.
ஆனால் ஒரு மிகப்பெரும் நன்மையையும் செய்தனர். 1836ஆம் ஆண்டு, பொதுக் கல்வித் திட்டம் (Public School Scheme) என ஒன்றை அறிமுகப்படுத்தினர். அதுவே, அடக்கப்பட்டு, அடிமைகள் ஆக்கப்பட்டு, இருட்டில் கிடந்த எண்ணற்ற மக்களுக்குக் கிடைத்த முதல் வெளிச்சம். சின்ன நம்பிக்கை.
அதுவும்கூட ஏறத்தாழ இன்னொரு எழுபது, எண்பது ஆண்டுகளுக்கு ஏட்டளவில் மட்டும்தான் இருந்தது. 1911-1921ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட குடிமதிப்பின் (Census) கணக்கின்படி, ஒவ்வொரு சமூகத்திலும் படித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? கீழே உள்ள புள்ளிவிரவரத்தைப் பாருங்கள்:

இதுதான் 87 ஆண்டுகளுக்கு முந்தைய நம் சமூகநிலை. 1960களுக்குப் பிறகுதான் மெல்ல மெல்லக் கல்விக் கதவுகள் நமக்குத் திறந்தன.
என் தலைமுறை படிக்கத் தொடங்கியது. எட்டாம் வகுப்பைச் சிலர் எட்டிப் பிடித்தார்கள். பதினோறாம் வகுப்பு (S.S.L.C), பெரிய பட்டப் படிப்பு போலக் கருதப்பட்டது. அதுவரை வந்தார்கள் சிலர். கல்லூரிக்குள் காலடி வைத்து, நான்காண்டுகள் படித்து முடித்து, பட்டம் வாங்கி, கறுப்பு உடையில் படம் எடுத்து, வீடுகளில் பெரிதாய் மாட்டி வைத்துக்கொண்டனர். என்னைப் போல் சிலர்.
அந்தப் படிப்பும், பட்டமும் அரசாங்கத்தில் சில வேலைகளை எங்களுக்குப் பெற்றுத்தந்தன. ஆண்டுக்கு 7 ரூபாய் ஊதிய உயர்வு என்பதை நாங்கள் ஆனந்தமாய்க் கொண்டாடினோம்.
உழவும், நெசவும், மீன்பிடித் தொழிலும், வேறு சில உதிரி வேலைகளும் தவிர, வேறு உலகம் தெரியாத எம் பெற்றோரிடமிருந்து நாங்கள் விலகி, அரசாங்கக் கட்டிடத்தில், மின் விசிறியின் கீழ் அமர்ந்து 'குமாஸ்தா' வேலை பார்த்ததை எண்ணி எண்ணிக் குதூகலமடைந்தோம். நாங்கள்தான அரசாங்கத்தையே நடத்துவதாக எண்ணி இன்ப நடம்புரிந்தோம்.
அந்தக் கட்டத்தில்தான், எங்களுக்குத் திருமணமாகி, பிள்ளைகளே நீங்கள் பிறந்தீர்கள், உங்களை நல்ல முறையில் படிக்கவைத்து, இயன்றவரை ஆங்கிலத்தில் படிக்கவைத்து, அரசாங்கத்திலும், வங்கிகளிலும் அதிகாரிகள் ஆக்கிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டோம்.
பள்ளிப் படிப்பு நம் வாழ்வின் ஒரு பகுதி என்பதை மறந்து, பள்ளிக்கே பிள்ளைகளை 'நேர்ந்து' விட்டது போல் ஆக்கிவிட்டோம். இன்று, நம் பிள்ளைகள், சமூகப் பார்வை அற்றவர்களாக இருக்கிறார்களே என்று நாங்களே நொந்து கொள்கிறோம்.
இப்போதும் கூடக் காலம் தாழ்ந்துபோய் விடவில்லை. கைக்கெட்டாத தூரத்தில் நீங்கள் காணாமல் போய்விடவில்லை.
''அது சரி, அப்படி என்ன எங்களுக்குச் சமூகப் பார்வையும், அக்கறையும் இல்லாமல் போய்விட்டது... நாங்களும் எங்களால் ஆன உதவிகளைப் பிறருக்குச் செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆண்டுக்கொரு முறை அநாதைப் பிள்ளைகளின் விடுதிகளுக்குச் சென்று அவர்களுக்கு உணவளிக்கிறோம். சில சமூக சேவைகளையும் செய்கிறோம். இதற்கெல்லாம் என்ன பெயர்'' என்று கேட்டு உங்களில் சிலர் கோபப்படக் கூடும்.
இவையெல்லாம் நல்ல செயல்கள்தான். ஆனால் சமூகப் பார்வை என்பது இவற்றிலிருந்தும் வேறுபட்டது. எப்படி என்கிறீர்களா?